மாநில அரசின் நிதி சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
மாநில அரசின் நிதி சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
மாநில அரசின் நிதி சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சென்னை : ''சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா மூலம், மாநில அரசின் உரிமையை, மத்திய அரசு பறிக்க உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதம்: பார்லிமென்ட் கூட்டத்தொடரில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) குறித்த, சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பார்லிமென்ட் நிலைக் குழு இது குறித்த கருத்துக்களை, மாநில அரசுகளிடம் கேட்டு வருகிறது. இதன்படி, தமிழக அரசு, பார்லிமென்ட் நிலைக்குழுவை தொடர்பு கொண்டு வருகிறது. அதே சமயம், இக்கடிதம் வாயிலாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தங்களுக்கு விளக்க விரும்புகிறேன்.
அரசியல் சட்டப்படி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை, மத்திய அரசு, சட்ட திருத்த மசோதா என்பதன் மூலம் அவற்றை பறித்து வருகிறது. அரசியலமைப்புபடி, மாநில வருவாய்க்கான நிதி ஆதாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக திகழ்வது, விற்பனை வரி தான். இவற்றைச் சார்ந்தே, மாநில அரசுகள் உள்ளன. எனவே, மத்திய அரசு எந்தவொரு வரி சீர்திருத்த நடவடிக்கை எடுத்தாலும், அது மாநில அரசின் நிதி சுதந்திரத்தை பறிக்காத வகையில் இருக்க வேண்டும்.
எங்களது கவலையெல்லாம், சரக்குகள் மற்றும் சேவை வரிகள் குறித்து தான். வரிகள் ஒருங்கிணைப்பு என்ற பெயரில், ஏற்கனவே மாநிலத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நிதி ஆதாரங்களை பறிக்கக் கூடாது. இதன் மூலம், குறிப்பிட்ட பொருளுக்கு, நாடு முழுவதும் ஒரே விலையை நிர்ணயிக்க முடியாது. தமிழகம் போன்ற மாநிலங்களில் நடுநிலை வரிவிகிதம், 17 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. இதனால், ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும். இதை, எந்தவொரு சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு முறைகளாலும், சரிசெய்ய முடியாது.
இந்த மசோதாவை மாநிலம் முழுவதும் அமல்படுத்தினால், பேரிடரும், நிச்சயமற்ற தன்மையும் ஏற்படும். எனவே, சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதாவை நிறைவேற்றும் முன்பாக, அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். மாநில நிதிஅமைச்சர்கள் குழு தலைவராக இருக்கும் சுஷில் குமார் மோடியிடம் இது குறித்து விளக்குவோம்.
இம்மசோதா, சரக்கு மற்றும் விற்பனை வரி மன்றத்தையும், சரக்கு மற்றும் விற்பனை விவகார தீர்ப்பாயத்தையும் உருவாக்குவதாக உள்ளது. மேலும், 279 ஏ பிரிவின்படி, சரக்கு மற்றும் விற்பனை வரி மன்றம் அமைக்கப்படவுள்ளது.
இம்மன்றம் எடுக்கும் முடிவுகளுக்கு, மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டியதிருக்கும். இதனால், மாநில அரசின் வரிவிதிப்பு உரிமையை இழக்க வேண்டியதிருக்கும்.
இம்மசோதாவிலிருந்து, உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் கேளிக்கை வரிகள் மட்டுமே, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள், நிர்வாக காரணங்களுக்காக, கேளிக்கை வரி வசூலிக்கின்றன. இவற்றையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. சொகுசு பொருட்கள் போன்றவற்றுக்கான வரி விகித சீரமைப்பு, மாநில சரக்கு மற்றும் விற்பனை வரி, மத்திய சரக்கு மற்றும் விற்பனை வரி போன்றவற்றை திட்டவட்டமாக தீர்மானிப்பதற்கான எதுவும் இதில் உருவாக்கப்படவில்லை. தேவையான ஆயத்தப் பணிகளை நிறைவேற்றாமல், திடீரென இம்மசோதாவை அமல்படுத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தக் கூடிய வகையில், வரி அமைப்பு இருக்க வேண்டும். மாநில அரசுகளின் நிதி சுயாட்சியை பறிக்கும் வகையில் உள்ளது என்பதால், இதில் நீங்கள் நேரடியாக தலையிட்டு, மாநிலங்களுடன் கலந்தாய்வை தொடர்ந்து நடத்தி, ஒருமித்த கருத்துக்களைப் பெற்று அதன் பின்னர் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மாநில முதல்வர்களுக்கு கடிதம் : முதல்வர் ஜெயலலிதா, சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா குறித்து, காங்கிரசார் அல்லாத முதல்வர்களுக்கு, கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இச்சட்ட திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளார்.