மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ரூ.5 கோடியில் புதிய தொழில் திட்டம் அறிமுகம் : கே.எஸ்.வடிவேல
மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ரூ.5 கோடியில் புதிய தொழில் திட்டம் அறிமுகம் : கே.எஸ்.வடிவேல
மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ரூ.5 கோடியில் புதிய தொழில் திட்டம் அறிமுகம் : கே.எஸ்.வடிவேல
சென்னை : மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம், 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இடைத்தரகர்கள் அந்த பொருட்களின் மதிப்பைக் கூட்டி, சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி, பலமடங்கு லாபம் சம்பாதிக்கின்றனர். இதனால், இடைத்தரகர்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறதே தவிர, மலைவாழ் மக்கள் வறுமையின் பிடியில் தொடர்ந்து சிக்கித் தவிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம், 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.
இந்த முன்னோடித் திட்டம், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை கிராமங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், இயற்கை நார் ஆடைகள் தயாரிப்பிற்கு தேவைப்படும் வாழை, கற்றாழை, புளிச்சகீரை உள்ளிட்ட இயற்கை நார் தயாரிக்கும் பயிற்சி, காளான் வளர்க்கும் பயிற்சி, தேன், காடுகளில் கிடைக்கும் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் ஊறுகாய் உள்ளிட்ட பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக தயாரிக்கும் பயிற்சி ஆகியவை, தற்போது அளிக்கப்பட்டு வருகின்றன.
இதைத் தவிர, பெரிய அளவிலான மூலிகைப் பண்ணையை உருவாக்கும் வகையில் மலைவாழ் பிரதிநிதிகள் மதுரை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள மூலிகைகளை பதப்படுத்தும் மற்றும் மூலிகை மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள இந்திய சித்த மருந்து தயாரிக்கும் குழுமத்தையும், அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
மூலிகைகள் வளர்ப்பு மூலம் சித்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து, மலைவாழ் மக்கள் பணியாற்ற உள்ளனர். மண் அரிப்பை தடுக்கும் வகையில், வெட்டிவேர் செடிகள் மலையில் லட்சக்கணக்கில் நடப்பட்டுள்ளன. இந்த வெட்டி வேரைக் கொண்டு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளன.
இது குறித்து மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஜவ்வாது மலையில் 229 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். மலைகளில் கிடைக்கும் பொருட்களை மதிப்புக் கூட்டி, சந்தையில் விற்பனை செய்ய வழிவகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இடைத்தரகர்கள் தவிர்க்கப்பட்டு, மலையில் கிடைக்கும் பொருட்கள் நேரடியாக நல்ல தரத்தில் மார்க்கெட்களில் விற்பனைக்கு கிடைக்கும். அதற்கான சந்தை வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி கிடைப்பதற்கு முன்னதாகவே, இந்த தொழில்களில் மக்களை கைதேர்ந்தவர்களாக மாற்ற தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்படும்' என்றார்.


