Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சாயக்கழிவு நீர் சுத்திகரிக்க தொழில்நுட்பம் :எஸ்.எஸ்.பி., நிறுவனம் விளக்கம்

சாயக்கழிவு நீர் சுத்திகரிக்க தொழில்நுட்பம் :எஸ்.எஸ்.பி., நிறுவனம் விளக்கம்

சாயக்கழிவு நீர் சுத்திகரிக்க தொழில்நுட்பம் :எஸ்.எஸ்.பி., நிறுவனம் விளக்கம்

சாயக்கழிவு நீர் சுத்திகரிக்க தொழில்நுட்பம் :எஸ்.எஸ்.பி., நிறுவனம் விளக்கம்

ADDED : ஆக 21, 2011 11:37 PM


Google News
திருப்பூர் : ஹரியானாவில் இயங்கும் எஸ்.எஸ்.பி., நிறுவனத்தின் 'எவாப்ரேட்டர்' தொழில்நுட்பத்தில், சாயக்கழிவு நீரை 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பது குறித்த கருத்தரங்கு, வேலன் ஓட்டலில் நடந்தது. அந்நிறுவன மேலாளர் அணிக்ராய் தலைமை வகித்தார். மண்டல உதவி மேலாளர் பரத் தியாகராஜன் வரவேற்றார்.

தொழில்நுட்ப செயல்பாடு குறித்து, மண்டல மேலாளர் ரகுராமன் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஜவுளி பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஹரியானா மாநிலத்தில் செயல்படும் எஸ்.எஸ்.பி., நிறுவனத்தின் 'எவாப்ரேட்டர்' தொழில்நுட்பம் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்புக்கு சரியான தீர்வாக உள்ளது.வழக்கம்போல் ஆர்.ஓ., சுத்திகரிப்பு பணி அதேபோல் நடக்கிறது. மொத்த கழிவுநீரில் 80 சதவீதம் அளவுக்கு நல்ல தண்ணீராக பிரித்து எடுக்கப்படுகிறது. மீதியுள்ள 20 சதவீத கழிவு நீர் 'எவாப்ரேட்டர்' தொழில் நுட்பத்தில் உப்பாக பிரித்தெடுக்கப்படுகிறது. சோலார், கிரிஸ்டிலைசர் போன்ற பிரிவுகள் தேவையில்லை.எங்களது 'எவாப்ரேட்டர்' தொழில்நுட்பத்தில், 100 சதவீதம் அளவுக்கு 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பு செய்யலாம். 'பாலிங் பில்ம் எவாப்ரேட்டர்' பிரிவில், கழிவுநீரை குழாய் வழியாக செலுத்தி, இடையே 'ஸ்டீம்' மூலமாக ஆவியாக்கப்படுகிறது. இறுதியாக, குழம்பு போல் மாறும் கழிவுநீர்,'ட்ரிபிள் எபக்ட் போர்ஸ்டு சர்குலேசன் எவாப்ரேட்டர்'பிரிவுக்கு அனுப்பப்படுகிறது.குழம்புபோல் இருப்பதால், மோட்டார் மூலமாக கீழிருந்து மேலாக உந்தி அனுப்பப்பட்டு, மீண்டும் ஆவியாக்கப்படுகிறது. ஆவி நீரை குளிர்வித்து, நல்ல நீராக பிரித்து எடுக்கப்படுகிறது. இறுதியாக, 'சால்ட் செபரேஷன்' பிரிவில் உள்ள 'திக்னர்' உப பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு, இறுதியான கழிவுநீரான, தண்ணீராகவும், உப்பாகவும் பிரிகிறது. அதன் பின், 'சென்டர் பியூஜ்' பிரிவுக்கு உப்பு அனுப்பி வைக்கப்பட்டு, சுத்தமான உப்பாக பிழிந்து எடுக்கப்படுகிறது. மீதியுள்ள கழிவுநீரை மீண்டும் 'டிரிபிள் எபக்ட் போர்ஸ்டு சர்குலேசன்' எவாப்ரேட்டருக்கு அனுப்பி, மீண்டும் சுத்திகரிப்பு நடக்கிறது.இதனால், 'சேலார் பாய்ண்ட்' எதுவும் தேவையில்லை. எங்களது தொழில்நுட்பம், பெருந்துறை பொது சுத்திகரிப்பு நிலையம் உட்பட சென்னை, திருப்பூர், பெருந்துறை, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20க்கும் அதிகமான ஜவுளி கழிவாலைகளில் பின்பற்றப்படுகிறது.இத்தகைய சுத்திகரிப்பு மூலமாக, சுற்றுச்சூழல் எவ்வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. இத்தகைய தொழில்நுட்பத்தை நிறுவ, எவர்சில்வர் மற்றும் டைட்டானியம் உலோகங்கள் பயன்படுத்தப்படுவதால், 'ஸ்கேலிங்' ஆவதும், துருப்பிடிப்பதும் தவிர்க்கப்படுகிறது, என்றார்.அங்கேரிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் உட்பட பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலைய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us