ADDED : ஜூலை 28, 2011 12:47 AM
ஆனைமலை : ஆனைமலை கோட்டூர் பகுதியில் உள்ள சத்துணவு கூடங்களில் ஆர்.டி.ஓ., திடீர் ஆய்வு செய்தார்.
கோட்டூர் அருகே உள்ள சத்துணவுக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நேற்றுமுன்தினம் ஆர்.டி.ஓ., அழகிரிசாமி ஆய்வு மேற்கொண்டார். மதிய உணவு மற்றும் குழந்தைகள் வருகை பற்றியும், மதிய உணவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாசிப்பயிறு மற்றும் மற்ற உணவுகள் குறித்து சோதனை செய்தார்.மதிய உணவில் சில சத்துணவு மையங்களில் முட்டைகள் மற்றும் பாசிபயிறு சரியாக வழங்குவதில்லை என்ற பொதுமக்களின் புகார் உள்ள நிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.ஓ., அழகிரிசாமி கூறும்போது, 'அங்கன்வாடிகளில் ஒரு குழந்தைக்கு 20 கிராம் பாசிபயிறு வழங்க வேண்டும். இதை சரியான அளவு வழங்குகிறார்களா என்பது பற்றியும், உணவுகள் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பது பற்றியும் ஆய்வு செய்யப் பட்டது', என்றார்.


