Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கோல்கட்டா அணிக்கு மீண்டும் அடி: தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி

கோல்கட்டா அணிக்கு மீண்டும் அடி: தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி

கோல்கட்டா அணிக்கு மீண்டும் அடி: தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி

கோல்கட்டா அணிக்கு மீண்டும் அடி: தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி

ADDED : செப் 28, 2011 01:17 AM


Google News
Latest Tamil News

ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' போட்டியில், கோல்கட்டா அணி இரண்டாவது தோல்வியை சந்தித்தது.

பேட்டிங்கில் அசத்திய தெற்கு ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.



இந்தியாவில் மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் 'பி' பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில், கோல்கட்டா நைட்ரைடர்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தெற்கு ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளிங்கர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.



அதிரடி துவக்கம்:

தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு ஹாரிஸ், கிளிங்கர் இணைந்து துவக்கம் கொடுத்தனர். இக்பால் அப்துல்லா, யூசுப் பதான் பந்துகளில் சிக்சர்கள் விளாசிய ஹாரிஸ் (25) சற்று தாக்குப் பிடித்தார். மறுபுறம் கிளிங்கர் (20) ரன் அவுட்டானார். போர்கஸ் (14) நிலைக்கவில்லை.



'சூப்பர்' ஜோடி:

இதன் பின் பெர்குசன், கிறிஸ்டியன் இணைந்தனர். இந்த ஜோடி கோல்கட்டா அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியில் அசத்திய கிறிஸ்டியன் (42) அரைசத வாய்ப்பை இழந்தார். கூப்பர் (1) ஏமாற்றினார். 18 ரன்னில் அவுட்டாகும் வாய்ப்பில் இருந்து தப்பிய பெர்குசன், சிக்சர், பவுண்டரி மழை பொழிந்தார்.தெற்கு ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. பெர்குசன் (40 பந்தில் 70 ரன்கள்) அவுட்டாகாமல் இருந்தார். கோல்கட்டா அணி சார்பில் பாலாஜி 2 விக்கெட் வீழ்த்தினார்.



மீண்டும் ஏமாற்றம்:

கடின இலக்கை துரத்திய கோல்கட்டா அணிக்கு முதல் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த பிஸ்லா (13), அடுத்த ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். சாகிப் அல் ஹசன் (13) நீடிக்கவில்லை. ஐ.பி.எல்., ஏலத்தில் ரூ. 11.7 கோடிக்கு வாங்கப்பட்ட கேப்டன் காம்பிர் (9) மீண்டும் ஏமாற்றினார். அனுபவ காலிசும் (20) அணியை கைவிட்டார்.



யூசுப் சொதப்பல்:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான், 5 ரன்னில் அவுட்டாகி, மற்றொரு அதிர்ச்சி தந்தார். சற்று தாக்குப்பிடித்த மனோஜ் திவாரி, அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். பின் வந்த டசாட்டே (32), பாட்டியா (21) கடைசி நேரத்தில் போராடிய போதும், அது வெற்றிக்கு போதவில்லை. பிரட் லீ 'டக்' அவுட்டானார்.



கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டும் எடுத்து, இத்தொடரில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது. இக்பால் அப்துல்லா (10) அவுட்டாகாமல் இருந்தார்.

ஆட்டநாயகனாக பெர்குசன் தேர்வு செய்யப்பட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us