/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இந்த தேர்தல் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் :பொள்ளாச்சியில் வைகோ பேச்சுஇந்த தேர்தல் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் :பொள்ளாச்சியில் வைகோ பேச்சு
இந்த தேர்தல் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் :பொள்ளாச்சியில் வைகோ பேச்சு
இந்த தேர்தல் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் :பொள்ளாச்சியில் வைகோ பேச்சு
இந்த தேர்தல் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் :பொள்ளாச்சியில் வைகோ பேச்சு
ADDED : அக் 05, 2011 02:11 AM
பொள்ளாச்சி : 'இந்த தேர்தல் பிரதான கட்சிகளுக்கு பதில் சொல்லும் தேர்தலாக
இருக்கும்; ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்' என, ம.தி.மு.க.,
பொதுச்செயலாளர் வைகோ பேசினார். பொள்ளாச்சி பகுதிகளில், ம.தி.மு.க.,
வேட்பாளர்களை ஆதரித்து கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில்வே பகுதிகளை கேரளா மாநிலம் பாலக்காடு
கோட்டத்துடன் சேர்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதி சம்மதித்ததால்,
கேரளாவின் பிடியில் சிக்கியுள்ளோம். கேரளா மக்கள் யாரையும் நாம் விரோதிகளாக
பார்க்கவில்லை. ஆனால், கேரளா அரசு தமிழகத்தை விரோதமாக நினைத்து
செயல்படுவதை எதிர்க்கிறோம். பாம்பாற்றில் அணைகட்டி தண்ணீரை திருப்பும்
முயற்சி, முல்லை பெரியாறு அணையை உடைக்க முயற்சி, கோவை, திருப்பூரின் நீர்
ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் அணையை பறிக்கும் திட்டம் என கேரளா அரசு
தமிழகத்திற்கு விரோதமாக செயல்படுகிறது. தமிழகத்துக்கு எதிராக யார்
செயல்பட்டாலும் ம.தி.மு.க., அனுமதிக்காது. சட்டசபை தேர்தலில்
போட்டியிடாததால் மக்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.,
கூட்டணியில் ஐந்தாண்டு இருந்தபோது, அவர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு
தோழமை கட்சியாக இருந்து தோள் கொடுத்தோம். ஆனால், தேர்தலில் ம.தி.மு.க.,
வின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அவர்கள் செயல்பட்டதால்,
கூட்டணியில் இருந்து வெளியேறி, தேர்தலில் போட்டியிடவில்லை. ம.தி.மு.க.,வின்
நிலைப்பாட்டுக்கு 75 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தலில்
போட்டியிடாவிட்டாலும், தமிழகத்திற்காகவும், தமிழக மக்களின் உரிமைக்காகவும்
போராடுவதை கைவிடவில்லை. ஊழலின் நிழல் கூட ம.தி.மு.க., மீது படியாதவாறு
நேர்மையாக உள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், கூடங்குளம் அணுமின் நிலைய
பிரச்னைகளில் முன்னின்று போராடினோம். அணுமின்நிலையத்தால் தமிழகத்தில்
ஆபத்து ஏற்படும் என்பதை 1988ல் பார்லிமென்ட் கூட்டத்தில் தெரிவித்துள்ளேன்.
மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பாக நினைத்து உள்ளாட்சி தேர்தலில்
போட்டியிடுகிறோம். எந்த பதவியும் இல்லாத போதே மக்களுக்காக பணியாற்றும்
எங்களிடம் பொறுப்பை ஒப்படைத்து பாருங்கள்... தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக
மாற்றுவோம்.இந்த தேர்தல் பிரதான கட்சிகளுக்கு பதில் சொல்லும் தேர்தலாக
இருக்கும். ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எங்களுக்கு
தேர்தலில் ஒரு அங்கீகாரம் கொடுங்கள். தமிழகத்தில் மறுமலர்ச்சியை
ஏற்படுத்துவோம்.
இவ்வாறு, வைகோ பேசினார். மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், அரசியல் ஆலோசனைக்குழு
உறுப்பினர் டாக்டர் வரதராஜ், நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர்
செந்தில்குமார் உடனிருந்தனர்.


