கர்நாடகாவில் சுரங்க மோசடியால் 16 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு
கர்நாடகாவில் சுரங்க மோசடியால் 16 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு
கர்நாடகாவில் சுரங்க மோசடியால் 16 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு
UPDATED : ஜூலை 28, 2011 12:51 AM
ADDED : ஜூலை 27, 2011 11:26 PM

பெங்களூரு: '' கடந்த, 2006 லிருந்து 2010 வரை, கர்நாடகாவில் நடந்த சுரங்க மோசடியினால், 16 ஆயிரத்து 85 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், நான்கு பா.ஜ., அமைச்சர்கள் முறைகேடாக செயல்பட்டுள்ளது ஆதாரங்களுடன் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது,'' என, லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார். சுரங்க மோசடி குறித்த இறுதி அறிக்கையை, லோக் ஆயுக்தா ரிஜிஸ்ட்ரர் நாயர், மாநில தலைமைச் செயலர் ரங்கநாத்திடம் விதான் சவுதாவில் வழங்கினார்.
பின்னர், பெங்களூரிலுள்ள கர்நாடக லோக் ஆயுக்தா அலுவலகத்தில், லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி சந்தோஷ் ஹெக்டே நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2006ல் லோக் ஆயுக்தா விசாரணைக்கு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, விசாரணை நடத்தி, முதல் அறிக்கை, 2008 டிசம்பர் 18 ல் அரசிடம் சமர்ப்பித்தேன். தற்போது இறுதி அறிக்கையை, கர்நாடக தலைமைச் செயலர் ரங்கநாத்திடம், என் அலுவலக அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையைத் தயார் செய்ய, நான்கு லட்சம் பைல்கள், 50 லட்சம் ஆதாரங்களைப் பரிசீலனை செய்துள்ளோம். இறுதி அறிக்கை 25 ஆயிரத்து 208 பக்கம் கொண்டது. கார்வார் மாவட்டம் பெலிகிரியில், 2010 மார்ச்சில், யூ.பி.சிங், மிஸ்ரா, உதயகுமார் ஆகிய லோக் ஆயுக்தா அதிகாரிகள் ஆய்வு செய்த போது, ஐந்து லட்சம் மெட்ரிக் டன் இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதியானதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ஆனால், சில நாளில் அவை காணாமல் போயின.
இதில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, என் பதவியை ராஜினாமா செய்தேன். பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க, ராஜினாமாவைத் திரும்பப் பெற்றேன். கடந்த, 2010 ஜூலையில், யூ.பி.சிங், மிஸ்ரா, உதயகுமார் ஆகியோர், இரும்புத் தாது மோசடியைக் கண்டுபிடித்தனர். இது குறித்து அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரத்திலுள்ள பல பெருந்தலைகளின் ஊழல்களை, லோக் ஆயுக்தா அதிகாரிகள் பல இன்னல்களுக்கு இடையில் விசாரணை செய்து, உண்மையைக் கண்டுபிடித்தனர். இதனால், சில இளம் அதிகாரிகள் துன்பத்துக்குள்ளாயினர். பெல்லாரி, ஹொஸ்பேட், தும்கூர் ஆகிய பகுதிகளில், 55 நிறுவனங்கள் முறைகேடாக சுரங்கத் தொழில் நடத்தி வருவதை, அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அனுமதிக்கு அதிகமான உற்பத்தி, லாரியில், 'ஓவர் லோடு' போன்ற பல்வேறு முறைகேடுகளை விளக்கினோம்.
லோக் ஆயுக்தா விதி எண், 72 'ஏ' படி, விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளோம். பெல்லாரி ரெட்டி சகோதரர்கள், ஜனார்த்தனன் ரெட்டி, கருணாகர ரெட்டி ஆகியோர் கர்நாடகத்தில் நாங்கள் தொழில் செய்யவில்லை, என்று கூறி வந்தனர். ஆனால், அவர்களின் கூற்று தவறு என்பதை நிரூபித்து, ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். கர்நாடகத்தில் முறைகேடான சுரங்கங்களை, அவர்கள் நடத்தி வருகின்றனர். முறைகேடான சுரங்க விஷயத்தில், அமைச்சர்கள் ஸ்ரீராமுலு, சோமண்ணா மற்றும் அவரது குடும்பத்தினர். ராஜ்யசபா எம்.பி., அனில் லாட், அவரது மனைவி, எம்.எல்.ஏ., நாகேந்திரா, முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும், 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 9 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 787 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகத்தில் நடந்து வரும் முறைகேடான சுரங்கங்களால், அரசுக்கு, 16 ஆயிரத்து 85 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் நகல், கவர்னர் பரத்வாஜுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினர் நடத்தும் பிரேரனா டிரஸ்ட்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு, 'செக்' முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை, முதல்வரின் குடும்பத்தினர், 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, 20 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர். பிரேரனா டிரஸ்ட்டுக்கு பல நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளன. நன்கொடை அளித்ததற்குப் போதுமான காரணங்கள் இல்லை. இதை ஊழல் என்றே கூற வேண்டும். 20 கோடி ரூபாய் நன்கொடை பெறுவது சாதாரணமாக நடக்கும் காரியமல்ல. கர்நாடகத்திலுள்ள, சுரங்க முறைகேடுகளை விசாரிக்க, ஐகோர்ட் மத்திய உயர் அதிகாரக் குழுவை அமைத்து ஆய்வு செய்தது. அது ஐகோர்ட் விசாரணையில் உள்ளது.
இதற்கு முன், நான் அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில், கூறப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த அறிக்கையில் அரசுக்கு, 450 சிபாரிசுகளைச் செய்துள்ளோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கருதுகிறேன். கவர்னரும் பரிசீலனை செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். பாரபட்சமின்றி அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறினார்.