அய்யப்பன் கோவிலில் நுழைந்த விவகாரம் : ஜெயமாலாவிடம் விளக்கம் கேட்டது கோர்ட்
அய்யப்பன் கோவிலில் நுழைந்த விவகாரம் : ஜெயமாலாவிடம் விளக்கம் கேட்டது கோர்ட்
அய்யப்பன் கோவிலில் நுழைந்த விவகாரம் : ஜெயமாலாவிடம் விளக்கம் கேட்டது கோர்ட்

ரான்னி : சபரிமலை அய்யப்பன் கோவிலில், துணை நடிகை ஜெயமாலா நுழைந்த விவகாரம் குறித்து, கேரள ரான்னி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரிடம் விளக்கம் பெறப்பட்டது.
இதைதொடர்ந்து கன்னட நடிகை ஜெயமாலா, பெங்களூருவில் அளித்த பேட்டியில், 'படப்பிடிப்புக்காக சபரிமலை சென்றபோது, அய்யப்பன் சன்னிதிக்குள் நுழைந்து, அய்யப்ப விக்ரகத்தை தொட்டு வணங்கினேன்' என்றார். இதுகுறித்து, அவர் பேக்ஸ் மூலமும் தேவஸ்தானத்திற்கு செய்தி அனுப்பியிருந்தார். இது பக்தர்களிடமும், ஆன்மிக பெரியவர்களிடமும் பலத்த அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த கேரள அரசு, மாநில குற்றப்பிரிவு (கிரைம் பிராஞ்சு) போலீசாருக்கு உத்தரவிட்டது. குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், சபரிமலை அய்யப்ப விக்ரகத்தை எளிதாக யாரும் தொட்டு விட முடியாது என்றும், தேவ பிரசன்னம் நடத்திய உன்னிகிருஷ்ண பணிக்கருக்கு ஆதரவாக ஜெயமாலா உண்மைக்குப் புறம்பாக பேட்டி அளித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இருப்பினும், நடிகை ஜெயமாலா, தான் அய்யப்ப விக்ரகத்தை தொட்டதை, மீண்டும் உறுதிப்படுத்தி பேசினார். இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இச்செயல் அமைந்துள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, உன்னிகிருஷ்ண பணிக்கரும், நடிகை ஜெயமாலாவும் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என, மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் குற்றப் பத்திரிகையை போலீசார் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். குற்றப்பத்திரிகையில், முதலாவது குற்றவாளியாக உன்னிகிருஷ்ண பணிக்கரும், இரண்டாவது குற்றவாளியாக அவரது உதவியாளர் ரகுபதியும், மூன்றாவது குற்றவாளியாக கன்னட நடிகை ஜெயமாலாவும் சேர்க்கப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணை, நேற்று முன்தினம் கோர்ட்டில் நடந்தது. இவ்வழக்கில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளின் விளக்கம் ஏற்கனவே பெறப்பட்டுவிட்ட நிலையில், மூன்றாம் குற்றவாளியான ஜெயமாலாவின் விளக்கத்தை மாஜிஸ்திரேட் நேற்று பதிவு செய்தார். அவருக்காக வழக்கறிஞர் அனில் சேவியர் ஆஜரானார். இவ்வழக்கின் விசாரணை மீண்டும் நாளை (15ம் தேதி)க்கு, மாஜிஸ்திரேட் ஒத்தி வைத்தார்.


