ADDED : அக் 08, 2011 12:14 AM
கோவை : கோவை வடக்கு மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 20 லட்சத்திற்கு மேல் இழப்பீடு வசூலிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கோவை அமலாக்க விழிப்பு பணிக்குழு செயற்பொறியாளர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவை அமலாக்க கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பறக்கும்படை உபகோட்ட பிரிவினர், வடக்கு மின் பகிர்மான அதிகாரிகளுடன் கு.வடமதுரை கோட்டத்தில் உள்ள இரு உயர் அழுத்த மின் இணைப்புக்களை ஆய்வு செய்தபோது, அந்த மின் இணைப்புக்களில் அங்கீகரிக்கப்படாத மின் நீட்டிப்பின் மூலம் வணிக பயன்பாட்டிற்கும், கட்டுமான பயன்பாட்டிற்கும் மின்சாரம் திருடப்படுவது கண்டு
பிடிக்கப்பட்டது.திருடப்பட்ட மின்சாரத்திற்கு சம்பந்தப்பட்ட நுகர்வோர் மின் வாரியத்திற்கு கட்டவேண்டிய இழப்பீட்டு தொகை ரூ.
20.40 லட்சம் என கணக்கிடப்பட்டு, அவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்டது. மேலும் நுகர்வோர் குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன் வந்து, சமரசத் தொகையாக ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.இவ்வாறு, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


