ADDED : ஆக 30, 2011 12:51 AM
திருப்பூர் : தரை தளம் இல்லாததால், தென்னம்பாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் மழைகாலங்களில் காய்கறி விற்பனை செய்ய முடியாமல் வர்த்தகம் பாதிக்கிறது.தென்னம்பாளையத்தில் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது.
பல்லடம், பொங்கலூர், அவிநாசி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகள், ஊட்டி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து சந்தைக்கு தினமும் டன் கணக்கில் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை கமிஷன் அடிப்படையில் கொள்முதல் செய்து, வியாபாரிகள் வர்த்தகம் செய்கின்றனர். காய்கறி வர்த்தகத்துக்காக நுகர்வோர், வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சந்தையில், தரை தளம் இல்லாதது மழைக்காலத்தில் வர்த்தக இழப்பு ஏற்படுத்துவதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.வியாபாரிகள் கூறியதாவது:தினமும் ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் வந்து செல்லும் சந்தையில், தரை தளம் அமைக்கப்படாமல் உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. ரோட்டை விட தாழ்வான பகுதியில் உள்ளதால், மழைகாலங்களில் சந்தை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்குகிறது. சேறும் சகதியுமாக மாறுவதால், தரையில் வைத்து காய்கறிகளை விற்பனை செய்ய முடிவதில்லை; தண்ணீர் நிற்பதால், வாகனங்களில் இருந்து காய்கறி மூட்டைகளை இறக்கி வைக்கவும் முடிவதில்லை.சந்தை வளாகம் முழுவதும் துர்நாற்றத்துடன் அருவருப்பாக காணப்படுவதால், மழைகாலங்களில் நுகர்வோர் வரத்து குறைந்து, விற்பனை முடங்கி விடுகிறது; காய்கறி தேங்கி, நஷ்டம் ஏற்படுகிறது. வெளியூர்களில் இருந்து காய்கறி கொண்டு வரும் லாரிகள் பாரத்துடன் சேற்றில் சிக்கிக்கொள்வதால், அவற்றை மீட்க பல மணி நேரம் போராட வேண்டியுள்ளது. ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி, காய்கறி மூட்டைகளை கடைகளுக்கு கொண்டுவர வேண்டியுள்ளதால் செலவு அதிகமாகிறது.மழை பெய்தால் ஒரு வாரம் வரை சந்தை பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால், சந்தை பகுதியில் சுகாதார பாதிப்பும் ஏற்படுகிறது. கொசு, ஈக்கள் பெருக்கம் அதிகரித்து வர்த்தகர்களை பாடாய்படுத்துகிறது; நோய் தாக்கும் அபாயம் உள்ளது. சந்தை வளாகத்தில் தரை தளம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


