ADDED : அக் 12, 2011 11:27 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வேட்பாளர்கள் வீதிகளில் இறங்கி வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், மொரப்பூர், காரிமங்கலம், ஒன்றியங்களுக்கம், கடத்தூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, பென்னாகரம் டவுன் பஞ்சாயத்து மற்றும் தர்மபுரி நகராட்சி பகுதிக்கும் வரும் 17ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.இப்பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 15ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது என்பதால், இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமாக களம் இறங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.தர்மபுரி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுமதி (அ.தி.மு.க.,), கந்தசாமி (தி.மு.க.,), டாக்டர் இளங்கோவன் (தே.மு.தி.க.,), வக்கீல் மோகன் (காங்.,), புனிதா (பா.ம.க.,), பிரபகாரன் (பா.ஜ.,) உள்ளிட்ட 13 பேர் தேர்தல் களத்தில் வலம் ருகின்றனர்.மொத்தம் 13 பேர் களத்தில் இருந்த போதும், அ.தி.மு.க., - தி.மு.க., -தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுக்கு இடையில் மட்டுமே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
இக்கட்சி வேட்பாளர்கள் காலையில் இருந்து மாலை வரையில் தங்கள் கட்சியின் சார்பில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் காலை 6 மணியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்துக்கான இடங்களை தேர்வு செய்து தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பழனியப்பன் நகரப்பகுதி முழுவதும் வார்டு, வாரியாக சென்று ஓட்டு சேகரித்துள்ளார். தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்து விட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாநில இளைஞர் அணி செயலாளர் சுதீஸ் வீதி, வீதியாக னெச்று டாக்டர் இளங்கோவனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் வீதிகளில் இறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்துள்ள நிலையில், இம்மூன்று கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வந்த போதும், அ.தி.மு.க.,வினர் தேர்தல் வேட்பு மனு துவக்கம் முதல் பிரச்சாரத்தில் சளைக்காமல் முன்னணியில் இருப்பதும், தொண்டர்கள் உற்சாகத்துடன் வலம் வருவதும் சதகமாக அமைந்துள்ளது.தி.மு.க., நகர பொறுப்பாளர் சிட்டி முருகேசன் சுயேச்சையாக களம் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது தி.மு.க.,வுக்கு தேவையற்ற நெருக்கடியையும், நகரப்பகுதியில் உள்ள தி.மு.க.,வின் ஓட்டு வங்கிகள் சிதறவும் அதிக வாய்ப்புள்ளது.தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவன் இளைஞர் பட்டாளத்துடன் வலம் வருவதோடு, புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் ஓட்டுக்கள் தே.மு.தி.க.,வுக்கு கை கொடுக்கும் என்ற போதும் வெற்றி வாய்ப்பு கடினமே. இருப்பினும் தேர்தல் பிரச்சாரம் தீவிரத்தை பொறுத்து இரண்டாமிடத்தை பிடிக்க கூடுதல் முயற்சிகளில் இக்கட்சியினர் ஈடுபட வேண்டும்.களத்தில் உள்ள பா.ம.க., - காங்கிரஸ் - ம.தி.மு.க., - பாரதிய ஜனதா ஆகிய கட்சி வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சி தொண்டர்கள் ஓட்டுக்களை மட்டும் தக்க வைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில நாட்கள் உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் தீவிரம் காட்டி வருவதால், தேர்தல் பரபரப்பு தர்மபுரியில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.


