Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர சோதனை துவங்கியது

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர சோதனை துவங்கியது

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர சோதனை துவங்கியது

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர சோதனை துவங்கியது

ADDED : ஆக 11, 2011 12:58 AM


Google News
Latest Tamil News

சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை துவங்கியது.

பயணிகள் தீவிர சோதனைகளுக்குப் பின்னரே ரயில் நிலையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். நாட்டின், 64வது சுதந்திர தின விழா, வரும் திங்கட்கிழமையன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து, தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், 225க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.



ஏராளமான புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. தினசரி பல லட்சக்கணக்கான பயணிகள், இரண்டு ரயில் நிலையங்களிலும் வந்து செல்கின்றனர். சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகள் நுழைவு வாயிலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களுக்குள் நுழையும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளின் உடமைகள், 'ஸ்கேனிங்' கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. மேலும், லக்கேஜ் மையங்களில், 'ஸ்கேனிங்' கருவி மூலம் சோதனை செய்து, இதற்கான அடையாள சீட்டு ஒட்டப்பட்ட பின்னரே, உடமைகள் வைக்கப்படுகின்றன. இதே போல், எழும்பூர் ரயில் நிலையத்திலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



சென்ட்ரல் ரயில் நிலைய ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் திருச்செல்வன் கூறுகையில், 'சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் காந்தி உத்தரவின் பேரில், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் நுழைவு வாயில்கள், வெளியேறும் வழிகளில் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் பணிபுரிபவர்கள், ரயில்வே ஊழியர்கள், போர்ட்டர்களிடம், தனியாக கிடக்கும் பொருட்கள், சந்தேகப்படும்படியாக இருப்பவர்கள் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.



தூசி தட்டி எடுக்கப்பட்ட 'ஸ்கேனிங்' கருவி



சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகளின் உடமைகளை சோதனை செய்வதற்காக, நவீன,'ஸ்கேனிங்' கருவி உள்ளது. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், அச்சுறுத்தல்கள் வரும் காலகட்டத்தில் மட்டும், இந்த கருவிகள் மூலம் பயணிகள் உடமைகள் சோதனை செய்யப்படும். பின், அக்கருவி ஓரங்கட்டப்படும். இதுவரை மூலையில் வைக்கப்பட்டிருந்த 'ஸ்கேனிங்' கருவி, நேற்று மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. தூசி படிந்த அந்த கருவியை, ரயில்வே பாதுகாப்பு போலீசார் சுத்தம் செய்த பின், சோதனைகளை துவக்கினர். 'சென்ட்ரல் ரயில் நிலையம் பல மாநிலத்தவர் நடமாட்டம் உள்ள பகுதி. இங்கு பாதுகாப்பு பணி அதி முக்கியமானது. அதிமுக்கியமான இங்கு, ஸ்கேனிங் கருவியை அவ்வப்போது உபயோகிப்பதால், தூசி தட்ட வேண்டியது இருக்காது. பாதுகாப்பு கருதி, ஆண்டு முழுவதும் 'ஸ்கேனிங்' கருவியை உபயோகப்படுத்தி, பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்' என்று பயணிகள் சிலர் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us