Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/டாஸ்மாக் மது "பார்'களை ஏலம் எடுத்ததில் அ.தி.மு.க.,வினர் தேர்தலில் நிற்பதில் சிக்கல்!

டாஸ்மாக் மது "பார்'களை ஏலம் எடுத்ததில் அ.தி.மு.க.,வினர் தேர்தலில் நிற்பதில் சிக்கல்!

டாஸ்மாக் மது "பார்'களை ஏலம் எடுத்ததில் அ.தி.மு.க.,வினர் தேர்தலில் நிற்பதில் சிக்கல்!

டாஸ்மாக் மது "பார்'களை ஏலம் எடுத்ததில் அ.தி.மு.க.,வினர் தேர்தலில் நிற்பதில் சிக்கல்!

ADDED : செப் 28, 2011 12:41 AM


Google News

கோவை : மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் விதிகளின்படி, டாஸ்மாக் 'பார்'களை தங்கள் பெயரில் ஏலம் எடுத்த அ.தி.மு.க.,வினர், உள்ளாட்சித் தேர்தலில் நிற்பது சிக்கலாகியுள்ளது.தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன; இவற்றில், 6 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகளில் 'பார்'கள் செயல்படுகின்றன.

கடந்த 2003ல் அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்திய பின், 'பார்'களை ஏலம் எடுத்து காசு பார்க்கும் வித்தை, அ.தி.மு.க.,வினருக்கு அப்போது தெரியவில்லை. ஆனால், கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, எந்தெந்த வகையில் எல்லாம் சம்பாதிக்க முடியும் என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து பார்த்து டாஸ்மாக் 'பார்'களை ஏலம் எடுப்பதிலும் தலையை நுழைத்தனர். மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தி 'பார்'களை எடுத்தனர்.எவ்வளவு விலைக்கு 'டெண்டர்' கோரப்பட்டாலும், அவற்றை இரவோடு இரவாக உடைத்து, அதற்கு மேல் 50 அல்லது 100 ரூபாய் கூடுதல் தொகையாகக் குறிப்பிட்டு, 'பார்'களை தங்கள் பெயரில் ஏலம் எடுத்தனர்; அவர்களில் பலர், நேரடியாக 'பார்'களை நடத்தினர்; பெரும்பாலானவர்கள், உள் வாடகைக்கு விட்டு விட்டு சத்தமே இல்லாமல் சம்பாதித்து வந்தனர்.டாஸ்மாக் 'பார்'களின் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்துக்கொண்ட தி.மு.க., நிர்வாகிகள், கடந்த 5 ஆண்டுகளில் லட்ச லட்சமாய்ச் சம்பாதித்தனர். இவர்களோடு 'மறைமுக கூட்டணி' போட்டிருந்த அ.தி.மு.க.,வினர் பலருக்கும் சில 'பார்'கள் ஒதுக்கப்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தி.மு.க.,வினர் செய்த அதே வேலையை அ.தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர்.கடந்த மாதத்தில், 'டெண்டர்' விடப்பட்ட பல்லாயிரக்கணக்கான 'பார்'களை, அ.தி.மு.க.,வினரே தங்களது பெயர்களில் எடுத்துள்ளனர். இவர்களது பெயரிலேயே ஒப்பந்தமும் தரப்பட்டுள்ளது. டாஸ்மாக் 'பார்'களை எடுத்துள்ள ஆளும்கட்சியினர் பலரும், அதை உள் வாடகைக்கு விட்டுள்ளனர்.இந்நிலையில், தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது; மற்ற கட்சிகளை முந்திக் கொண்டு, ஆளும்கட்சியே வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த பலரும், டாஸ்மாக் 'பார்'களை ஏலம் எடுத்தவர்கள். அதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்ற நினைப்பில்தான், அ.தி.மு.க.,வினர் பலரும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தனர்.



தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் விதி முறையில் இந்த சந்தோஷத்துக்கு 'ஆப்பு' வைத்துள்ளது. வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான விதிகளில், (பிரிவு 9 ஏ) பொருள் வினியோகம் செய்யவோ அல்லது பணி செய்யவோ அரசுடன் வணிகம் அல்லது தொழில் ஒப்பந்தம் செய்திருந்தால் அவரின் மனுவை நிராகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.இதன்படி, டாஸ்மாக் 'பார்' அல்லது தேர்தல் வாய்ப்பு இரண்டில் ஒன்றை விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஆளும்கட்சியினர் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு 'பார்' ஏலம் எடுத்தவர்கள் யாராவது, வேட்புமனு தாக்கல் செய்துள்ளனரா என்று எதிர்க்கட்சியினர் தேடுதல் வேட்டையைத் துவக்கி விட்டனர்.இதற்கேற்ப, தேர்தலில் வாய்ப்பு கிடைத்த ஆளும்கட்சியினர் பலரும், தங்களது பெயர்களில் உள்ள 'பார்'களை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். அந்த 'பார்'கள், தங்களுக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கையில், ஆளும்கட்சியினரும் சந்தோஷமடைந்துள்ளனர். தேர்தலில் வாய்ப்பு கிடைத்து வெற்றி கிடைக்காவிட்டால், 'பார்'களை ஒப்படைத்த ஆளும்கட்சியினர் நிலை பரிதாபம்தான்.நிராகரிக்க வேண்டும்: எந்தக் கட்சியையும் சாராத மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், 'டாஸ்மாக் 'பார்'களை ஏலம் எடுத்திருந்தால், அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டியது கட்டாயம்; தேர்தல் விதிகளில் அது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நபர், ஒரு வேளை ஜெயித்து விட்டால், அவரது 'பார்'க்குள் என்ன முறைகேடு நடந்தாலும் யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்படும்,' என்றார்.உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் அலுவலராக பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எங்களுக்குத் தந்துள்ள கையேட்டில் வேட்புமனுவை நிராகரிப்பதற்கான பிரிவுகளில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது; யாராவது, இந்த காரணத்துக்காக ஆட்சேபம் செய்தால், அதைப் பரிசீலித்து வேட்புமனுவை நிராகரிப்பதே எங்களின் கடமை,' என்றார்.



எக்ஸ்.செல்வக்குமார்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us