நில நடுக்கத்தை தாங்கும் நிலையில் நம்மூர் கட்டடங்கள் இல்லை:கருத்தரங்கில் நிபுணர் அதிர்ச்சித் தகவல்
நில நடுக்கத்தை தாங்கும் நிலையில் நம்மூர் கட்டடங்கள் இல்லை:கருத்தரங்கில் நிபுணர் அதிர்ச்சித் தகவல்
நில நடுக்கத்தை தாங்கும் நிலையில் நம்மூர் கட்டடங்கள் இல்லை:கருத்தரங்கில் நிபுணர் அதிர்ச்சித் தகவல்
ADDED : அக் 05, 2011 01:10 AM
சென்னை:சென்னை நகரில் பூகம்பம் ஏற்பட்டால், அதை தாக்கு பிடிக்கும் வகையில், குடியிருப்பு பகுதிகளும், மேம்பாலங்களும் அமைக்கப்படவில்லை என்று, அண்ணா பல்கலை முன்னாள் முதல்வர் சாந்தகுமார் தெரிவித்தார்.கிண்டி பொறியியல் கல்லூரி வடிவமைப்பு பொறியாளர் கழகத்தின் சார்பில், சென்னை மாநகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் உண்டாகும் விளைவு குறித்த கருத்தரங்கம், அண்ணா பல்கலையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சாந்தகுமார் பேசியதாவது:சென்னை நகரில் உள்ள கட்டடங்களுக்கு, நிலநடுக்கத்தை தாங்கும் திறன் குறைவாகவே உள்ளது. அதில் வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டடம், சென்னை பல்கலை போன்ற கட்டடங்களில், நிலநடுக்கம் வந்தால், தாங்கும் சக்தி இல்லை.
தற்போது, புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், கம்ப்யூட்டர் கம்பெனிகளின் கட்டடங்களில் பாதுகாப்பு குறைவாக உள்ளதால் நிலநடுக்கத்தின் போது, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த பிரச்னைகளே, நிலநடுக்கத்தின் போது, பாதிக்கப்படும் பகுதிகளில் மண்டலம் இரண்டில் இருந்து, மூன்றிற்கு சென்னை மாற்றப்பட்டதற்கு காரணம்.மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் அடித்தள பகுதியில், கார் பார்க்கிங் அமைக்கப்படும் போது, நிபுணர்களின் அறிவுரைப்படி கட்டினால், பாதுகாப்பாக இருக்கும். தற்போது, சென்னையில் உள்ள பெரும்பாலான பாலங்களில், ஒரு தூண் அடிப்படையிலேயே அமைத்து கட்டப்பட்டுள்ளது. அவற்றை இரண்டு தூண்களாக அமைத்து கட்டும்போது தான் நிலநடுக்கத்தின் போது சேதம் ஏற்படாது.எனவே, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள், பாலங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பதுடன், கட்டடங்களை வடிவமைக்கும் போது, இயற்கை சீற்றத்தை தாங்குவது போல் கட்ட வேண்டும்.இவ்வாறு சாந்தகுமார் பேசினார்.


