கட்சி பதவியிலிருந்து பரிதி இளம்வழுதி ராஜினாமா
கட்சி பதவியிலிருந்து பரிதி இளம்வழுதி ராஜினாமா
கட்சி பதவியிலிருந்து பரிதி இளம்வழுதி ராஜினாமா
ADDED : அக் 08, 2011 10:21 PM

சென்னை:துணை பொதுச் செயலர் பதவியை, பரிதி இளம்வழுதி ராஜினாமா செய்துள்ளார்.தி.மு.க., துணை பொதுச் செயலர்களில் பரிதி இளம்வழுதியும் ஒருவர். பொருளாளர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, துணை பொதுச் செயலர் பதவியை, அவர் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்ததாவது:தி.மு.க., வடசென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட, 103வது வட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.நாதன், கட்சிப் பேச்சாளர் எழும்பூர் கு.வீராசாமி ஆகியோர், கடந்த சில தினங்களுக்கு முன், தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டனர்.
பரிதி இளம்வழுதி கட்சித் தலைமைக்குச் செய்த புகாரின் பேரில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.நீக்கப்பட்ட இவர்கள், கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபற்றி, பொதுச் செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை, கட்சிப் பத்திரிகையில் நேற்று வெளிவந்தது. இதில்,கோபமடைந்த பரிதி இளம்வழுதி, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் கொடுத்து நீக்கியவர்களை, கட்சியில் மீண்டும் சேர்த்துள்ளது, தொண்டர்கள் மத்தியில் தனக்கு அவமரியாதை ஏற்படுத்துவதாகும் என, ஸ்டாலினிடம் தெரிவித்தார்இதற்கு, சாதகமான பதில் எதுவும், ஸ்டாலினிடமிருந்து பரிதிக்கு கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்து, துணை பொதுச் செயலர் பதவியை, பரிதி ராஜினாமா செய்துள்ளார்.இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.இருப்பினும், பரிதியின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகவோ, நிராகரித்ததாகவோ அறிவிப்பு எதையும், தி.மு.க., தலைமை வெளியிடவில்லை.


