PUBLISHED ON : அக் 10, 2011 12:00 AM

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேச்சு:தமிழகத்தில், 43 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆதரவில் தான் திராவிடக் கட்சிகள் ஆட்சி நடத்தி வருகின்றன. உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படாததற்கு, காங்கிரஸ் ஆதரவால் வெற்றி பெற்றவர்கள், அந்தந்தப் பகுதி மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படாததே காரணம். இந்த நிலையை மாற்றவே காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி பேச்சு: தேர்தல் பிரசாரத்துக்காக, நான் செல்லும் இடங்களில் எல்லாம், முந்தைய தி.மு.க., அரசு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் குறித்து, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல இடங்களில் அடிப்படை வசதிகள் செய்யாததால், தி.மு.க., கவுன்சிலர்கள் பிரசாரத்துக்கு செல்லவே தயக்கம் காட்டுகின்றனர். தி.மு.க., மேயர் வேட்பாளர்களும், கவுன்சிலர் வேட்பாளர்களும் தோல்வி பயத்தில் துவண்டு போய் இருக்கின்றனர்.
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு பேட்டி: தி.மு.க., ஆட்சியில், ஊழல், நில அபகரிப்பு செய்தவர்கள் மீது உரிய ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் தவறில்லை. அதை விடுத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சியினரை காவல்துறை மூலம் ஒடுக்க நினைத்தால், ஆளுங்கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி பேட்டி: ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசில், அதன் கூட்டணி கட்சிகளான, தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை, தொடர்ந்து நீடிக்காது. சீட்டுக் கட்டு சரிவதைப் போல, விரை வில் கவிழ்ந்து விடும். காங்கிரசின் ஊழலை, தங்கள் முதுகில் சுமக்க வேண்டுமா என்ற கேள்வியும், அது குறித்து அமைதியின்மையும், கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி அமீது அன்சாரி பேச்சு: மக்களிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து, ஒரே குடும்பமாக வாழ ஆன்மிக வழிபாடு அவசியம். நம் வாழ்வியல் நடைமுறைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், நல்லதொரு முன்னேற்றத்தை அடைய அது வழிவகுக்கும். மனிதர்களிடம் உள்ள எதிர்மறையான எண்ணங்களை நேர்மறையான எண்ணங்களாக மாற்ற, ஆன்மிக வழிபாடு முக்கியம்.
மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு: ஊழல் கறை படிந்த தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த உதவிய கூட்டணிக் கட்சிகளை, அ.தி.மு.க., உதாசீனப்படுத்தி விட்டது. ஏற்றிய ஏணியை எட்டி தள்ளி விட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, பரமக்குடியில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, நான்கு பேரை கொன்றனர். இரண்டு பேரை, போலீசார் அடித்தே கொன்றனர். இத்தகைய அராஜகம் புரியும், அ.தி.மு.க.,விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.


