/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கி.கிரியில் பரவும் வைரஸ் காய்ச்சல் : சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மக்கள் அவதிகி.கிரியில் பரவும் வைரஸ் காய்ச்சல் : சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மக்கள் அவதி
கி.கிரியில் பரவும் வைரஸ் காய்ச்சல் : சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மக்கள் அவதி
கி.கிரியில் பரவும் வைரஸ் காய்ச்சல் : சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மக்கள் அவதி
கி.கிரியில் பரவும் வைரஸ் காய்ச்சல் : சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மக்கள் அவதி
ADDED : ஆக 18, 2011 12:59 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் திடீர் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு டைபாய்டு மற்றும் வைரஸ் காய்சல் பரவி வருகிறது.
வெப்ப மண்டல பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பக்காற்று வீசி வந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பகலிலும் இரவிலும் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. வெப்பக்காற்று வீசி வந்த நிலையில், திடீரென மாறிய சீதோஷ்ண நிலையால் பொதுமக்களை சளி மற்றும் காய்சல் தாக்கி வருகிறது.
கடந்த நான்கு நாட்களாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக நகர் புறங்களில் மழை நீரில் சாக்கடை நீர் சேர்ந்து பல இடங்களில் தேக்கமடைந்துள்ளது. தேங்கிய நீரில் 'லார்வா' புழுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் கொசுகள் அதிக அளவில் உற்பத்தியாகியுள்ளன. இந்த வகை கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது வைரஸ் மற்றும் டைபாய்டு காய்சல் தோன்றுகிறது.
கிருஷ்ணகிரி நகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக குழி தோண்டும் போது பல இடங்களில் பழுதாகியுள்ள குடிநீர் குழாயில் சாக்கடை நீர் மற்றும் மழை நீர் கலந்து செல்வதால் அதனை குடிப்பவர்களையும் காய்ச்சல் தாக்கி வருகிறது. சளி மற்றும் காய்சல் வந்தவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு சென்றால் 'சிப்ரோபிளக்சின்', 'அமாக்சலின்' போன்ற ஆண்டிபயாடிக் மாத்திரைகளும், 'பாராசிட்டமால்' மாத்திரைகளும் தரப்படுகிறது. இந்த மாத்திரைகள் சாதாரண சளி மற்றும் காய்சலை குணப்படுத்தும் தன்மையுடையதாகும்.
வைரஸ் மற்றும் டைபாய்டு காய்சல் ஏற்பட்டுள்ளவர்கள் இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் காய்சல் குணமாகாது. மூன்று நாட்களுக்கு மேல் காய்சல் உள்ளவர்கள் ரத்தப்பரிசோதனை செய்து கொண்டால் அவர்களை எந்த வகை வைரஸ் காய்சல் தாக்கியுள்ளது என்பது தெரியவரும். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட வைரஸ் கிருமியை அழிக்கும் மாத்திரைகளை சாப்பிட்டால் மட்டுமே வைரஸ் காய்சல் குணமாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமபுறங்களில் வைரஸ் மற்றும் டைபாய்டு காய்சல் தாக்கி கை கால் வீக்கம் ஏற்பட்டுள்ளவர்கள் அதனை முடக்கு அம்மா என்று கூறி மாந்தீரிகம் மட்டுமே செய்கிறார்கள். இவ்வாறு செய்பவர்களுக்கு நோய் முற்றி இறப்பு அபாய நிலையும் ஏற்படுகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் பொதுமக்களை குறிப்பாக குழந்தைகளை அதிகம் சளி மற்றும் வைரஸ் காய்சல் தாக்கி வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள் நல சிறப்பு மருத்துமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் செல்வது அதிகரித்துள்ளது.
இது குறித்து டாக்டர்கள் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீதோஷ்ணநிலை மாற்றத்தால் வைரஸ் மற்றும் டைபாய்டு காய்சல் அதிக அளவில் பொதுமக்களை தாக்கி வருகிறது. இந்த நோய்கள் குடிநீர் மற்றும் கொசுக்களால் பரவுகிறது. இதனை தடுக்க பொதுமக்கள் கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்க வேண்டும். மழை காலங்களில் பழைய உணவு வகைகள் மற்றும் குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
வீட்டுக்கு அருகில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்க முடியும். மூன்று நாட்களுக்கு மேல் காய்சல் உள்ளவர்கள் கண்டிப்பாக ரத்த பரிசோதனை செய்து எந்த வகை காய்சல் தாக்கியுள்ளது என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும். மேலும் வீட்டுக்கு அருகில் பழைய டயர், தேங்காய் ஓடுகள், உடைந்த மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.


