Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருவக்கரை தேசிய கல்மர பூங்கா சீரழிகிறது முறையாக பராமரிக்க அரய் முன் வருமா?

திருவக்கரை தேசிய கல்மர பூங்கா சீரழிகிறது முறையாக பராமரிக்க அரய் முன் வருமா?

திருவக்கரை தேசிய கல்மர பூங்கா சீரழிகிறது முறையாக பராமரிக்க அரய் முன் வருமா?

திருவக்கரை தேசிய கல்மர பூங்கா சீரழிகிறது முறையாக பராமரிக்க அரய் முன் வருமா?

ADDED : ஆக 22, 2011 01:03 AM


Google News
புதுச்சேரி : தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திருவக்கரை கல்மரப் பூங்கா, முறையான பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.

இந்திய புவியியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவக்கரை தேசியக் கல்மரப் பூங்கா, 247 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இங்கு மரங்கள் கல்லாகிப் போனதற்கான வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, கல்லுருவாக மாறிய பெரிய அடி மரங்கள் சிறு மேடுகளில் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இதுவரை இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட கல்மரங்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன. கல்லுருவான சில அடி மரங்கள் 30 மீட்டருக்கு மேல் நீளமும், 1.5 மீட்டர் குறுக்களவும் கொண்டவையாக உள்ளன. இக்கல்லுரு மரங்களில் பட்டையோ, கிளைகளோ, வேர்களோ காணப்படாததால் இம்மரங்கள் கல்லாக மாறுமுன்பே, இப்போது இருக்குமிடத்திற்கு கொண்டுவரப் பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆதியில் சாதாரண அடி மரங்களாக இருந்தவை காலப் போக்கில் சிலிக்கா என்னும் மணற்பொருள் ஏறி மரத்தின் தன்மை முற்றிலும் மாறி கல் மரங்களாக மாறியிருக்கக் கூடும் என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கல் மரங்களான பிறகு வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டன என்பதற்கு சான்று கிடைக்கவில்லை. எனவே, இப்பொழுது கல்மரங்கள் எந்தப் பாறைகளுடன் சேர்ந்துள்ளனவோ அந்தப் பாறைகளின் காலத்தைச் சேர்ந்தனவாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. கல்மரங்களின் அமைப்புகள், அதன் காலத்தை பிரதிபலிக்கின்றன. திருவக்கரையில் உள்ள கல் மரங்கள் 'மீசெம்பிரையோக் சைலான் ஷ்மிடியேனம்' என்னும் திறந்த விதை தாவர இனம், மூடிய விதை தாவர இனத்தை சேர்ந்தவை என தெரிய வந்துள்ளது. இக் காலத்திலுள்ள புன்னை குடும்பம், முதிரை குடும்பம், ஆமணக்கு குடும்பங்களைச் சேர்ந்த இனங்களும் இந்த கல்லுருத் தாவரங்களில் இருக்கக் கூடும் என்று தெரிய வந்துள்ளது. புளிய மரத்தையொத்த மரமும் இங்கு காணப்படுகிறது. இந்த பழம் பெருமையெல்லாம் இன்னும் சில ஆண்டுகளில் பழங்கதையாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கல்மரங்கள் சிறிது சிறிதாகக் கொள்ளை போவது தான் இதற்குக் காரணம். வரலாற்றுச் சுவடுகள் என்ற உணர்வே இல்லாமல், கல்மரங்கள் கொள்ளை போவது தொடர்கதையாக உள்ளது. திருவக்கரை தேசிய பூங்காவில் இருந்து கல்மரங்களின் மாதிரி துண்டுகளை எடுத்துச் செல்ல கூடாது, எந்தவிதமான சேதம் விளைவிக்கக் கூடாது என்று அறிவிப்பு பலகை இருந்தும் பலனில்லை. பூங்காவை பாதுகாக்க சுற்றிலும் 5 அடி உயரத்திற்கு கம்பி வேலி அமைக்கப்பட்டது. இந்த கம்பிகள் தற்போது காணாமல் போய்விட்டன. இதனால் கால்நடைகள் பூங்காவிற்குள் நுழைந்து கல்மரங்களையும், அங்கு வளர்ந்துள்ள அரிய வகை தாவரங்களையும் சேதப்படுத்துகின்றன. திறந்தவெளியில் இருக்கும் கல்மரங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் சிதைந்து வருகின்றன. போதாக்குறைக்கு பூங்காவைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் பைகளை கண்ட இடத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால் தேசிய கல்மரப் பூங்கா தற்போது குப்பை மேடாக மாறிவிட்டது. திருவக்கரை கோவிலில் இருந்து தேசிய கல்மரப் பூங்காவிற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல சிரமமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் கல்மரங்களை பாதுகாக்க அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள், அதற்காக நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திருவக்கரை கல்மரப் பூங்காவின் முக்கியத்துவத்தை உணராததால், இங்கு வரும் பொது மக்கள் கல்மரங்களுக்கு சேதம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய புவியியல் கட்டுப்பாட்டில் உள்ள திருவக்கரை கல்மரங்களை பட்டியலிட்டு புத்தகமாக வெளியிட வேண்டும். 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரங்கள் புவியியல்படி இப்பாறைகள் யாவும் கடலூர் மணற்கல் தொகுப்பை சேர்ந்தவை. ஏறத்தாழ இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை. ஆனால் கிராம மக்களோ இவ்விடத்தில் மகாவிஷ்ணுவால் கொல்லப்பட்ட அரக்கனின் எலும்புகளே இந்த கல்மரங்கள் என்று நம்புகின்றனர். கீழை நாடுகளில் 18ம் நூற்றாண்டில் பயணம் செய்த எம்.சோனராட் என்ற ஐரோப்பிய இயற்கை விஞ்ஞானி தான் இக்கல்மரங்களைப் பற்றி முதன்முதலாக எழுதியுள்ளார் (1781). இக்கல் மரங்களை பற்றிய ஆராய்ச்சி பல காலமாக நடந்து வந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us