Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் அன்பழகன் எம்.எல்.ஏ., மீது நில அபகரிப்பு புகார்

மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் அன்பழகன் எம்.எல்.ஏ., மீது நில அபகரிப்பு புகார்

மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் அன்பழகன் எம்.எல்.ஏ., மீது நில அபகரிப்பு புகார்

மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் அன்பழகன் எம்.எல்.ஏ., மீது நில அபகரிப்பு புகார்

ADDED : ஆக 03, 2011 01:12 AM


Google News
Latest Tamil News

சென்னை : மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், சேப்பாக்கம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், ஐயப்பன் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் அபகரித்த பணத்தை மீட்டுத் தரும்படி, சென்னை கிண்டியை சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.

உடுமலை சீனிவாசன் என்பவர் அளித்த புகாரின் பேரில், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., அன்பழகனை திருப்பூர் போலீசார் சில தினங்களுக்கு முன் சென்னையில் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர்.



இந்நிலையில், சென்னை, புனித தோமையர் மலை, பேட்ரிக் சர்ச் மூன்றாவது லேனைச் சேர்ந்தவர் தம்புராஜ், 53; நேற்று காலை, போலீஸ் கமிஷனர் திரிபாதியிடன் அளித்த புகார் : கடந்த 1994ம் ஆண்டு, தி.நகர் பாகிரதியம்மாள் தெருவில் வசித்த மூர்த்தி என்பவரின் மனைவி சீதா என்பவர், என்னிடம் இருந்து கடனாக 17 லட்சம் பெற்றார். அதற்கு அடமானமாக, வெங்கட் நாராயணா சாலையில் அவருக்கு சொந்தமாக இருந்த 4,475 சதுரடி அளவுள்ள நிலத்தை எனக்கு தந்தார். அந்த அடமான பத்திரத்தில், என்னிடம் பெற்ற தொகையை மூன்று ஆண்டுகளில் வட்டியும் சேர்த்து கொடுத்து விடுவதாகவும், இயலாவிட்டால், அந்த சொத்தை என் பெயருக்கே பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் எழுதி கையெழுத்திட்டு தந்தார்.



அதன் பின், 1999ம் ஆண்டு வரை எனக்கு வட்டியையோ, அடமான தொகையையோ அவர் செலுத்தாமல், அவர் இறந்து விட்டார். எனவே, அடமானப் பத்திரப்படி, அந்த மனையும், வீடும் எனக்கு சொந்தமானதாகியது. கடந்த 2007ம் ஆண்டு ஜனவரியில், நான் அந்த வீட்டிற்கு சென்று விசாரித்த போது, அங்கு வேலைக்காரர்களாக இருந்த கருணாகர் பெகாரா, சரத் சந்திர குமார், ஆகியோர் அந்த வீட்டை அபகரிக்க முயன்றதால், சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதையும் அறிந்தேன். இதற்கிடையில், வேலைக்காரர் கருணாகர் பெகாரா பணம் பெற்றுக் கொண்டு, அந்த வீட்டின் சுவாதீனத்தை, தி.நகர், சவுந்திரராஜன் தெருவைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு கொடுத்துவிட்டார்.



கடந்த 2007ல், ஆவணங்களுடன் ஐயப்பனை சந்தித்து கேட்ட போது, 4 கோடி ரூபாய் தந்தால், சுவாதீனத்தை ஒப்படைத்து விடுவதாக கூறினார். பல்வேறு தவணைகளில் ரொக்கமாகவும், வங்கி செக்காகவும் ரூ.1.30 கோடி கொடுத்தேன். அம்மாதம் 30ம் தேதி என்னிடம் மனையையும், வீட்டையும் ஒப்படைத்துவிட்டு ஐயப்பன் வெளியேறினார்.



நான் காவலுக்கு ஆட்களை வைத்துவிட்டு, மதுரைக்கு சென்று, இரண்டு நாட்களில் திரும்பிய போது, ஐயப்பன் அடியாட்களுடன் வந்து மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். அப்போது, ஐயப்பனும், தி.மு.க., வட்டச் செயலர் உதயசூரியனும், தென் சென்னை மாவட்ட செயலர் அன்பழகனை சந்திக்க கூறினர். அவரை சந்தித்த போது, ' ஸ்டாலின் அந்த வீட்டை இடித்துவிட்டு, காம்ப்ளக்ஸ் கட்டப்போவதால், இங்கிருந்து சென்று விடவேண்டும்; இல்லையேல், உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என்று மிரட்டினார்.



இதை, ஐயப்பனிடம் தெரிவித்த போது, ரூ.4 கோடியில் மீதமுள்ள ரூ.2.70 கோடியை கேட்டார். அதை நான் கொடுத்தும் ஐயப்பன் வீட்டை காலி செய்யவில்லை. நான் மதுரையில், துணை மேயர் மன்னனை சந்தித்து விவரங்களை சொன்ன போது, அவர், 40 லட்சம் ரூபாய் கேட்டார்; நான் கொடுத்தேன். பணத்தை பெற்றபின், மன்னன் முன்னிலையிலேயே என்னை மிரட்டினர்.



மீண்டும் ஐயப்பனிடம் சென்று வீட்டை கேட்ட போது, அன்பழகனிடம் அழைத்துச் சென்றார். அவரோ, நான் கடனுக்காக இந்திர சந்ந் நாகர் என்பவருக்கு செய்து கொடுத்த விற்பனை பத்திரத்தை ஒப்படைக்குமாறு கேட்டார். கடத்திச் சென்று, பொய் வழக்குப் போடுவதாக மிரட்டி, சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, பத்திரத்தை ரத்து செய்ய வைத்தனர். பின்பு அவர்கள் போலி ஆவணம் தயாரித்து, சரத் சந்திர குமார் வைத்திருந்த போலி உயில் மூலம், அன்பழகனின் மகன் ராஜா பெயரில், குறைந்த மதிப்பீட்டில் பதிவு செய்தனர். தற்போது, புதிய கட்டடம் கட்டப்பட்டு, அதில், சரவண பவன் ஓட்டல் இயங்கி வருகிறது. எனவே, அன்பழகன், ஐயப்பன், உதயசூரியன், மன்னன் மற்றும் இவர்களது அடியாட்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து, என்னை மிரட்டி பறித்த, இடத்தையும், 4 கோடி ரூபாய் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



துப்பாக்கியை காட்டி மிரட்டினர்!

அன்பழகன், ஐயப்பன் மீது புகார் அளித்த தர்மராஜ் கூறும் போது,''அந்த வீடு மற்றும் மனை தொடர்பாக, நான் மார்வாடிக்கு எழுதிக் கொடுத்த விற்பனை பத்திரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்பழகன், ஐயப்பன், உதயசூரியன் மற்றும் ரவுடி ஆட்டோ மூர்த்தி ஆகியோர் மிரட்டினர்.

தொடர்ந்து, என்னை கடத்திய ஐயப்பன் உள்ளிட்டோர், துப்பாக்கி மற்றும் கத்திமுனையில் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்து, சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, ஏற்கனவே நான் செய்திருந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்யச் செய்தனர். அப்போது, ''இது எங்கள் ஆட்சி, நாங்கள் சொன்னால் போலீஸ் அப்படியே செய்யும். உன் மீது பிரவுன் சுகர் கடத்தியதாக வழக்கு பதிவு செய்வோம்,'' என்று ஐயப்பன் உள்ளிட்டோர் மிரட்டினர்,'' என்றார்.



மதிப்பை குறைத்து பதிவு!



வீட்டை திருப்பிக் கொடுக்க ஐயப்பன், பணம் கேட்ட போது, தனக்குத் தெரிந்த மார்வாடி ஒருவரிடம் பணம் வாங்கிக் கொடுத்தார் தர்மராஜ். அப்போது, தர்மராஜ், அந்த வீட்டை நான்கு கோடி ரூபாய் என மதிப்பிட்டு, விற்பனை பத்திரம் செய்து கொடுத்துள்ளார். ஆனால், போலி ஆவணங்கள் தயாரித்து, அந்த வீட்டு முன்னாள் வேலைக்காரர் சரத் சந்திரகுமார் வைத்திருந்த போலி உயில் மூலம், அன்பழகனின் மகன் ராஜா பெயருக்கு அந்த இடத்தையும், வீட்டையும் பதிவு செய்த அன்பழகன், ஐயப்பன் உள்ளிட்டோர், ஒரு கோடி ரூபாய் என மதிப்பிட்டு, அதை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், இந்த விவகாரத்தில் முத்திரைக்கட்டணம் குறைவாக கட்டப்பட்டுள்ளதால், பத்திரப்பதிவுத் துறையையும் இந்த கும்பல் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us