
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'தமாஷ்' பேட்டி : தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, புதிய அணியை அமைக்க, பா.ம.க., நடவடிக்கை எடுக்கும் என்ற அறிவிப்பிற்கு, மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி: சமச்சீர் கல்வியின் தரத்தை குறை கூறுபவர்கள், 2004ம் ஆண்டு மெட்ரிக் பாடத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த, கடும் முயற்சி செய்கின்றனர். சமச்சீர் பாடத்திட்டம் தரம் இல்லை என, யாராவது நிரூபிக்கத் தயாரா? இதை, ஒரு சவாலாகவே கேட்கிறேன்!
இந்திய குடியரசு கட்சித் தலைவர், செ.கு.தமிழரசன் பேட்டி: சமச்சீர் கல்விக்கு எதிராக, தமிழக அரசு செயல்படுவதைப் போன்று பிரசாரம் செய்யப்படுகிறது. தெளிவான, முழுமையான வகையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் சமச்சீர் கல்வி செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஓராண்டு கால அவகாசம் எடுத்துக் கொள்வதால், எந்த சிக்கலும் வரப்போவதில்லை.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு: வரும் 2020ல், இந்தியா வல்லரசாக வர வேண்டும். சிகரத்தையும், அறிவுப் புதையலையும், உழைப்பால், அடைய வேண்டும். அதற்கு எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். இளைஞர்கள் தங்கள் உழைப்பால், இந்தியாவை வளமான நாடாக உருவாக்க வேண்டும்.
லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் சந்தோஷ் ஹெக்டே பேச்சு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் மக்களின் சேவகர்கள். நம் பணியை செய்வதற்காக, நம் பிரதிநிதிகளாக அவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளோம் என்பதை, அவர்கள் மறந்துவிட்டனர். தேர்தல் வரை நம் சேவகர்கள் என்று கூறி வந்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நம் எஜமானர்கள் ஆகிவிடுகின்றனர்.
இந்து மக்கள் கட்சி பொதுச் செயலர் ஞானசம்பந்தம் பேச்சு: போலி சாமியார் நித்யானந்தாவை, உடனே கைது செய்ய வேண்டும். அவரை தமிழகத்திற்குள் வர விட மாட்டோம். அவருக்கு எதிராக, தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். தன் பெயருக்குப் பின்னால், 'பரமஹம்சர்' என்று போட்டுள்ளதை நீக்க வேண்டும். இல்லையென்றால், அவரின் ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்.