பிரதிபா பாட்டீலுடன் பா.ஜ., தலைவர்கள் சந்திப்பு
பிரதிபா பாட்டீலுடன் பா.ஜ., தலைவர்கள் சந்திப்பு
பிரதிபா பாட்டீலுடன் பா.ஜ., தலைவர்கள் சந்திப்பு

புதுடில்லி : 'உத்திரப்பிரதேச முதல்வர் மாயாவதி ஆட்சியில் நடந்து வரும் ஊழல்கள் குறித்தும், சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு குறித்தும், விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை, பா.ஜ., தலைவர்கள் நேற்று, நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
பின்னர், நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாயாவதியின் ஆட்சியில், உத்திரப்பிரதேசத்தின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. அரசு இயந்திரமும் முழுமையாக செயலிழந்து விட்டது.
அம்மாநிலத்தில் நடந்து வரும் ஊழல் முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் கோரிக்கை விடுத்தோம்.
ஜனாதிபதி தலையீட்டினால் மட்டுமே, விசாரணைகள் சுதந்திரமாகவும், உண்மையாகவும் நடக்கும் என நம்புகிறோம். எனவே தான், அவரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். மாயாவதியின் கடந்த நான்காண்டு கால ஆட்சியில், நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில், 2 லட்சத்து 54 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன. சட்டம் - ஒழுங்கு நிலைமையும் மிகவும் மோசமாகி விட்டது.
மாநிலத்தில், பெண்களும், தலித் சமூகத்தினரும் பயத்துடனேயே வாழ்க்கையை கழிக்க வேண்டியுள்ளது. தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவது அதிகரித்துள்ளது. துணை தலைமை மருத்துவ அதிகாரி சச்சானின் மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாநில அரசு, ஏழை விவசாயிகளிடமிருந்து விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, பெரு முதலாளிகளுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் தாரைவார்க்கிறது. இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.


