ADDED : அக் 12, 2011 02:27 AM
தஞ்சாவூர்: தஞ்சைக்கு தேர்தல் பார்வையாளர் வருகை எதிரொலியாக விதி மீறல் புகார்கள் குவியத்துவங்கியுள்ளன.
தஞ்சை மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வரும் 17,19 தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பாஸ்கரன் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மாநில தொழில் மற்றும் வணிகவரித்துறை கூடுதல் ஆணையரை, தஞ்சை மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் தஞ்சை வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். தொடர்ந்து கரந்தை ஒத்தை தெருவுக்கு சென்ற அவர், வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கப்பட்டதா என்பது குறித்து வாக்காளர்களை நேரில் சந்தித்து கேட்டார். அப்போது தேர்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு உள்ள குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து சுற்றுலா மாளிகைக்கு திரும்பிய அவர், தான் அறை எண்- ஆறில் தங்கியிருப்பதாகவும், பொது மக்கள், வாக்காளர்கள் தினமும் ஐந்து மணி முதல் ஆறு மணி வரை தன்னை சந்தித்து தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவித்ததோடு, 94876-33814 என்ற தனது மொபைல்ஃபோன் எண்ணையும் வெளியிட்டார். நேற்று காலை ஒன்பது மணிக்கே சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்ட அவர், நகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். இது நாள் வரை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துகள் இருந்தன. வேட்பாளர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். அந்த சின்னம் தாங்கிய பொருளை வாங்கித்தருகிறார்கள். மது பாட்டில் சப்ளை, பிரியாணி விருந்து நடக்கிறது என்று பரவலாக பேசப்பட்டது. என்றாலும் புகார்கள் வரவில்லை. தேர்தல் பார்வையாளர் வந்து, அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியதன் விளைவாக புகார்களும் வரத் தொடங்கி விட்டன. நேற்று முன்தினம் தஞ்சை நகராட்சி 51 வது வார்டில் மா.கம்யூ., சார்பில் நிர்மலா நகர் பரமசிவம் போட்டியிடுகிறார். அவர், தனது ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பிரியாணி சப்ளை செய்வதாக புகார் வந்தது. தகவலறிந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று பிரியாணி விருந்து குறித்து உறுதி செய்து, வேட்பாளர் மீது தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்குப்பதிவு செய்தனர். அதே போல தஞ்சை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள 18004257036, 18004257066 ஆகிய டோல் ப்ரீ தொலைபேசிகளிலும் சில புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி பாஸ்கரன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.


