ADDED : செப் 30, 2011 01:49 AM
கடலூர் : பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுவதாக
அறிவித்தவரின் மகனை தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் அடுத்த
அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் மண்ரோடு
பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மனைவி கீதா நியமிக்கப்பட்டிருந்தார். அதே
பேரூராட்சியில் அ.தி.மு.க., வைச் சேர்ந்த குமார், 31, என்பவரின் தாய்
கலாவதி சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கீதாவின் உறவினர் அரி, 30, மற்றும் அவரது ஆதரவாளர்கள்
சுரேஷ், 30, ஏழுமலை, 26, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மண்ரோடு மூர்த்தி
டூவீலர் ஒர்க்ஷாப் அருகே நடந்து வந்த குமாரை வழிமறித்து தாக்கினர். இதில்
பலத்த காயமடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் அண்ணாமலை நகர்
போலீசார் வழக்குப் பதிந்து, அரி, சுரேஷ், ஏழுமலை ஆகியோரை கைது செய்தனர்.


