ADDED : ஆக 28, 2011 01:46 AM
சென்னை:சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் மீரா மங்குந்தா, 65. இவரது, கணவர்
சுதாகர், கனாடாவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர், சென்னை போலீஸ்
கமிஷனர் திரிபாதியிடம் புகார் ஒன்று அளித்தார். மீரா மங்குந்தாவுக்கு,
சென்னை, உத்தண்டியில், 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுமனை உள்ளது.
கனடாவிலிருந்து, திரும்பி வந்த மீராவின் கணவர் சுதாகர், தொழில் தொடங்க
விரும்பினார். பணம் குறைவாக இருந்ததால், தி.நகரைச் சேர்ந்த,
தர்மலிங்கத்திடம், உத்தண்டி வீட்டு மனை மற்றும் மூலப்பத்திரத்தை அடமானம்
வைத்து, 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். தர்மலிங்கத்தின் மகன் ரமேஷ்
பாபுவுக்கும், மருமகள் பரிமளாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்து
வந்தது.கணவர் மற்றும் மாமனாரை பழிவாங்க நினைத்த, பரிமளா, வீட்டிலிருந்த,
மீரா மங்குந்தாவுக்குச் சொந்தமான, மூலப் பத்திரத்தை திருடி எடுத்து,
டிரைவர் சிவக்குமார், ரியல் எஸ்டேட் புரோக்கர் ராமன், சித்ரா மூலம்
சுப்புராஜ் என்பவருக்கு, 17 லட்சத்துக்கு விற்று விட்டார்.
இதையடுத்து, மீரா மங்குந்தா கொடுத்த புகாரின் பேரில், சிவக்குமார், ராமன்,
சித்ரா ஆகியோரை போலீசார் நேற்று, கைது செய்து, சைதாப்பேட்டை கோர்ட்டில்,
ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். போலீசார், பரிமளாவை தேடி
வருகின்றனர்.


