Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மார்ட்டினிடம் "மாஜி' அதிகாரிகள் எடுபிடி வேலை

மார்ட்டினிடம் "மாஜி' அதிகாரிகள் எடுபிடி வேலை

மார்ட்டினிடம் "மாஜி' அதிகாரிகள் எடுபிடி வேலை

மார்ட்டினிடம் "மாஜி' அதிகாரிகள் எடுபிடி வேலை

ADDED : ஆக 17, 2011 01:36 AM


Google News
கோவை : சொத்து அபகரிப்பு வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் லாட்டரி அதிபர் மார்ட்டினுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படும் போலீஸ், அரசுத்துறை அதிகாரிகள் குறித்து உளவுப் போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் நகரில் வசிப்பவர் பாலாஜி; முன்னாள் லாட்டரி வியாபாரி.

இவருக்குச் சொந்தமான சொத்துகளை அபகரித்து மிரட்டல் விடுத்த வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டின், கடந்த 13ம் தேதி சேலம் மாநகர போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சென்னை, நசரத்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசில் இரு வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன. இவ்வழக்குகளில் முன்ஜாமின் பெற்று போலீஸ் ஸ்டேஷன்களில் கையெழுத்திட்டு வந்த நிலையில், சேலம் மாநகர போலீசில் பதிவான சொத்து அபகரிப்பு வழக்கில் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். இவர் மீது, கோவை நகர் மற்றும் புறநகர் போலீசில் மேலும் இரு புகார்கள் அளிக்கப்பட்டுள்ள போதிலும், எப்.ஐ.ஆர்.,பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கான சட்ட முகாந்திரம் உள்ளதா என, சட்ட ஆலோசகரின் அறிவுரையை போலீசார் கோரியுள்ளனர்.இதற்கிடையே, லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், கடந்த தி.மு.க., ஆட்சியின்போது தனியாரிடம் இருந்து விலைக்கு வாங்கிய நிலங்கள், சொத்துகள் தொடர்பான தகவல்களை மாநில உளவு போலீசார் திரட்டி வருகின்றனர். இதற்கான ஆரம்ப கட்ட விசாரணையில், மார்ட்டின் நிறுவனங்களில், ஓய்வு பெற்ற அரசுத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சிலர் மறைமுகமாக சம்பளத்துக்கு பணியாற்றி வருவதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, மாஜி அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நான்கு பேரின் விபரங்களை திரட்டியுள்ள உளவு போலீசார், மார்ட்டின் நிறுவனங்களில் அவர்கள் என்ன மாதிரியான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர், நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளில் அவர்களுக்கு தொடர்பு ஏதும் உள்ளதா என, விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:லாட்டரி அதிபர் மார்ட்டினுடன், அரசு மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமின்றி, தற்போது பணியில் இருக்கும் போலீஸ் உயரதிகாரிகள் சிலரும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். அவர்களை பற்றிய தகவல்களும் திரட்டப்படுகின்றன. கோவை மாநகர போலீசில் முன்பு பணியாற்றி, ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., ஒருவர், மார்ட்டின் நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி போல செயல்பட்டு அரசு மற்றும் போலீஸ் துறைகளில் சில காரியங்களை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மார்ட்டின் தற்போது, சொத்து அபகரிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், ஏ.டி.எஸ்.பி., உள்ளிட்ட மாஜி அதிகாரிகள் சிலரிடமும் சேலம் மாநகர போலீசார் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us