ADDED : செப் 03, 2011 02:49 AM
மதுரை : மதுரையில் ஹாக்கி மைதானம் அமைக்க, தினமலர் இதழ் செய்தி எதிரொலியாக பட்ஜெட்டில் ரூ.
ஆறு கோடி ஒதுக்கப்பட்டது. மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இரண்டு, எல்லீஸ்நகரில் ஒன்று என மூன்று ஹாக்கி மைதானங்கள் உள்ளன. இவற்றில் அடிப்படை வசதிகள் இல்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணைய உறுப்பினர் செயலராக இருந்த அதுல்யமிஸ்ரா, 2007ல் ஹாக்கி சிறப்பு மையத்தை எல்லீஸ்நகரில் திறந்து வைத்தார்.
அதன்பின் மையம் செயல்படவில்லை. மையத்தில் ஹாக்கி வீரர்களுக்கு பயிற்சி, போக்குவரத்து கட்டணம், சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பயிற்சியை எதிர்பார்த்த வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரேஸ்கோர்ஸ் அல்லது எல்லீஸ்நகர் மைதானத்தில் செயற்கை புல்தரை அமைக்க வேண்டும் என தினமலர் இதழில் செய்தி வெளியானது. தற்போது செயற்கை புல்தரை மைதானம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸில் மைதானம் மற்றும் 5000 பார்வையாளர்கள் அமரும் வகையில் காலரி அமைக்க தகுந்த இடவசதி உள்ளது. முறையான ரோடு, தண்ணீர் வசதி செய்து கொடுத்தால், எல்லீஸ்நகர் ஹாக்கி மைதானத்திலும் காலரி அமைக்க முடியும். காலரி அமைக்க இதில் ஒரு தகுந்த இடத்தை தேர்வு செய்து பணிகளை தாமதமின்றி துவக்க வேண்டும். இதனால் தேசிய போட்டிகளையும் மின்னொளியில் இரவு, பகலாக இங்கு நடத்த வாய்ப்புகள் உருவாகும். ஒதுக்கப்பட்ட நிதியில் சிறப்பு மையத்தையும் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் திறமையான வீரர்களை உருவாக்க முடியும்.


