தயாநிதி குறித்த பைல்களை கோருகிறது சி.பி.ஐ.,
தயாநிதி குறித்த பைல்களை கோருகிறது சி.பி.ஐ.,
தயாநிதி குறித்த பைல்களை கோருகிறது சி.பி.ஐ.,
UPDATED : அக் 07, 2011 12:06 AM
ADDED : அக் 06, 2011 11:10 PM

புதுடில்லி: 'முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியின் வீட்டிற்கு, 323 தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக வழங்கியது தொடர்பான பைல்களை, தொலைத்தொடர்புத் துறை சமர்ப்பிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., உத்தரவிட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி பதவி வகித்த காலத்தில், சென்னையில் உள்ள அவரின் போட் ஹவுஸ் இல்லத்திற்கு, பி.எஸ். என்.எல்., பொது மேலாளர் பெயரில், 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டன.
சன் 'டிவி' அலுவலகத்தில் இருந்து பூமிக்கு அடியில் தயாநிதியின் வீட்டிற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக கேபிள்கள் மூலம், இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன. இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம், கட்டணம் அதிகமான ஐ.என்.டி.என்., வசதிகளைக் கொண்டிருந்தன. அதன் மூலம் சன் 'டிவி'க்குத் தேவையான தகவல்கள், செய்திகள் மற்றும் 'டிவி' நிகழ்ச்சிகள், உலகம் முழுவதிலும் இருந்து வெகு விரைவாகப் பெறப்பட்டன என்று சில தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
புகார் குறித்து, ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன் விசாரணை நடத்திய சி.பி.ஐ., இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய தொலைத்தொடர்புத் துறையை கேட்டுக் கொண்டது. ஆனால், அந்தத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் முழுமையான விசாரணையை சி.பி.ஐ., துவக்கியது.
இதையடுத்து, சன் 'டிவி' நிறுவனத்திற்கும், தயாநிதியின் வீட்டிற்கும் இடையே அமைக்கப்பட்டிருந்த கேபிள்கள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான விவரங்களைத் தரும்படி, தகவல் தொடர்புத் துறையை சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


