Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ஓட்டுக்கு அரிசி மூட்டை : தர்மபுரி அருகே பெரும் பரபரப்பு

ஓட்டுக்கு அரிசி மூட்டை : தர்மபுரி அருகே பெரும் பரபரப்பு

ஓட்டுக்கு அரிசி மூட்டை : தர்மபுரி அருகே பெரும் பரபரப்பு

ஓட்டுக்கு அரிசி மூட்டை : தர்மபுரி அருகே பெரும் பரபரப்பு

ADDED : அக் 05, 2011 12:02 AM


Google News
Latest Tamil News
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஓட்டுக்கு அன்பளிப்பு வழங்குவது துவங்கி விட்டது. தர்மபுரி அருகே பஞ்சாத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஓட்டுக்கு, ஒரு மூட்டை அரிசி வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி யூனியனுக்கு உட்பட்டது கே.நடுஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்கள் முத்துகவுண்டன்கொட்டாய், சவுளூர், கொளகத்தூர், நாகரசம்பட்டி கிராமம். கே.நடுஅள்ளி பஞ்சாயத்துத்துக்கு தலைவர் பதவிக்கு முத்துகவுண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மல்லிகா. (ராஜேந்திரன் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார்). மல்லிகா மற்றும் கொளகத்தூர் கிராமத்தை சேர்ந்த மாதையன் மனைவி பார்வதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட சவுளூர் கிராமத்தில், ஐந்தாண்டாய் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. தற்காலிகமாக பஞ்சாயத்து சார்பில் போர் அமைத்து தெருக்களில் உள்ள, 10க்கும் மேற்பட்ட பொது குழாய்கள் மூலம் தினம் உப்பு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொளகத்தூரை சேர்ந்த ராணிகவுதமன் கடந்த ஐந்தாண்டாய் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார். சவுளூர் கிராமத்துக்கு கொளகத்தூர் ஏரியில் இருந்து போர் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் குடிநீர் கிடைக்கவில்லை.

கொளகத்தூர் கிராமத்தில் மட்டும் நல்ல குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கொளகத்தூரில் இருந்து சளுவூர், 2 கி.மீ., தூரம் உள்ளது. மேலும் கிராமத்தில் அடிப்படை வசதி இல்லை. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மல்லிகா மற்றும் பார்வதி ஆகியோர் தங்களை தேர்வு செய்தால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதிகள் அளித்து வருகின்றனர். நேற்று அதிகாலை சவுளூர் கிராமத்தில் உள்ள வீடுகளின் முன், 25 கிலோ கொண்ட பொன்னி அரிசி மூட்டைகள் இருந்தது. ஓட்டுக்காக மல்லிகாவின் ஆதரவாளர்கள் அரிசி மூட்டையை வைத்து சென்றாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளின் முன் இருந்த அரிசி மூட்டைகளை ஊர் நடுவில் உள்ள கோவில்களில் கொண்டு வந்து வைத்தனர்.

மொத்தம், 110 மூட்டை அரிசிகள் கோவில் முன் குவிக்கப்பட்டது. சிலர் மட்டும் தங்கள் வீட்டுக்குள் அரிசி மூட்டைகளை எடுத்து வைத்து கொண்டனர். தகவல் அறிந்த வேட்பாளர் மல்லிகாவின் ஆதரவாளர்கள், மூனறு ஆட்டோக்களில் வந்து அரிசி மூட்டைகளை அங்கிருந்து எடுத்து சென்றனர்.

சம்பவம் அறிந்து தர்மபுரி தாசில்தார் கமலநாதன், ஆர்.ஐ., கார்த்திகேயன், வி.ஏ.ஓ., சுந்தரம் ஆகியோரும் மதிக்கோன்பாளையம் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த பூங்கொடி என்பவர் வீட்டில் இருந்த மூன்றரை மூட்டை பொன்னி அரிசியை பறிமுதல் செய்தனர். (மொத்தம் 87 கிலோ) சில பூட்டிய வீடுகளிலும் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிந்தது.

இது குறித்து தாசில்தார் கமலநாதன் கூறுகையில்,''தகவல் அறிந்து மூன்றரை மூட்டை அரிசி பறிமுதல் செய்துள்ளோம். யார் வைத்தார்கள் என்பது விசாரணைக்கு பின் தெரியும்,'' என்றார்..

அக்கிராம மக்கள் கூறும்போது,'ஓட்டுக்காக அரிசி மூட்டைகளை மல்லிகா தரப்பினர் வைத்துள்ளனர். தேர்தலில் பணம் அதிகம் புழக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. எங்கள் கிராமத்துக்கு குடிநீர் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பவர்களுக்கு நாங்கள் ஓட்டு போடுவோம்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us