ஆதிதிராவிடர் விடுதிகளை புதுப்பிக்க ரூ.76.33 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் விடுதிகளை புதுப்பிக்க ரூ.76.33 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் விடுதிகளை புதுப்பிக்க ரூ.76.33 கோடி ஒதுக்கீடு

சென்னை:சரிவர பராமரிக்கப்படாமல் இருக்கும், 1,059 ஆதிதிராவிட மாணவர் விடுதிகளை மேம்படுத்த, 76.33 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:சிறப்பான கல்வி தான், நலிந்த பிரிவினரான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார நிலையில் நிரந்தரமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
இதனால் தான், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுமென, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தோம்.முதல்வராக பதவியேற்றதும், தமிழகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் அனைத்தும் சரிவர பராமரிக்கப்படாமல், மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாவது குறித்து எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதுபற்றிய முழு விவரங்களையும் சேகரிக்க உத்தரவிட்டேன்.
துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், மாநிலம் முழுவதும் உள்ள 1,294 விடுதிகளில், 1,059 விடுதிகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்ததும், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள், சரிவர இல்லாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது.எனவே, ஆதிதிராவிட மாணவ, மாணவியர், அமைதியான, சுகாதாரமான சூழலில் தங்கி கல்வி பயில, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 1,059 ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில், பழுது பார்ப்பு, சிறப்பு பராமரிப்பு, கூடுதல் கட்டுமானப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 76 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி, உத்தரவிட்டுள்ளேன்.


