12வது ஐந்தாண்டு திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
12வது ஐந்தாண்டு திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
12வது ஐந்தாண்டு திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
ADDED : செப் 15, 2011 11:46 PM

அடுத்த 12வது ஐந்தாண்டு திட்டத்தில் சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் தருவது என்றும், இதுகுறித்த அணுகுமுறை அறிக்கையை அக்டோபரில் நடக்கும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் வைத்து முடிவெடுக்க உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய திட்டக் கமிஷனின் முழு கூட்டம், சில வாரங்களுக்கு முன், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அடுத்து வரப்போகும் 12வது ஐந்தாண்டு திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையை அடிப்படையாக வைத்து, மாதிரி அணுகுமுறை வரைவு அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், 12வது ஐந்தாண்டு திட்டத்தை எவ்வாறு வரையறுப்பது என்றும், அதில் எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிப்பது என்பதும் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, 12வது ஐந்தாண்டு திட்டத்தில் 9 சதவீத வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயலாற்றுவது என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. தவிர சுகாதாரம், கல்வி, தனித்திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல், கட்டமைப்பு போன்ற துறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்திடுவது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த அணுகுமுறை வரைவு அறிக்கை வைக்கப்பட்டது.
இந்த அறிக்கை மீது நடந்த ஆலோசனையின் முடிவில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது. அதோடு தேசிய வளர்ச்சிக் குழுவுக்கும் அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. தேசிய வளர்ச்சிக் குழுவில் அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக இருப்பதால், அந்த குழுவில் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தை அக்டோபர் மாதம் டில்லியில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.
- நமது டில்லி நிருபர் -


