ADDED : ஜூலை 25, 2011 01:56 AM
சூலூர் : சூலூர் அருகே காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த டெம்போவை, பொதுமக்கள் நேற்றுமுன்தினம் சிறை பிடித்தனர்.சூலூர், பருவாய் கிராமத்தை சேர்ந்த 200க்கும்மேற்பட்ட வாடிக்கையாளருக்கு, பல்லடத்தில் உள்ள தனியார் காஸ் ஏஜன்சி சிலிண்டர் சப்ளை செய்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக குறித்த நேரத்தில் சிலிண்டர் சப்ளை செய்யவில்லை என கூறப்படுகிறது. சிலிண்டருக்கு பதிவு செய்து இரண்டு மாதங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். காஸ் ஏஜன்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் பொதுமக்கள், நேற்றுமுன்தினம் காலை 10.00 மணிக்கு சிலிண்டர் சப்ளை செய்ய வந்த டெம்போவை பருவாய்- அப்பநாயக்கன்பட்டி ரோட்டில் சிறை பிடித்தனர். சம்பவ இடத்துக்கு சூலூர் போலீசார் மற்றும் காஸ் ஏஜன்சி உரிமையாளர் சென்று பொது மக்களிடம் சமாதானம் பேசினர். இனி முறையாக சிலிண்டர் சப்ளை செய்யப்படும் என, உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.