"ஏர் இந்தியா ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம்'
"ஏர் இந்தியா ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம்'
"ஏர் இந்தியா ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம்'

புதுடில்லி : ''ஏர் இந்தியா ஊழியர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடுகையில், 'வெளிப்படையான ரகசியம் என்னவென்றால், ஏர் இந்தியா நிதிப் பற்றாக்குறையால் சிரமப்படுகிறது. இதை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஏர் இந்தியாவின் நிதிப் பிரச்னையை சமாளிக்க, பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். எனவே, விரைவில் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்' என்றார்.
விமானத் துறை அமைச்சர் வயலார் ரவி உடல் நலமில்லாமல் உள்ளதால், அவருக்கு பதிலாக பதிலளித்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ''தனியார் விமான நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படவில்லை. கடந்த ஆண்டு நிலவரப்படி, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 13 ஆயிரத்து 326 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 6 ஆயிரத்து 994 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
''குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் விமானங்கள் அதிகரித்து விட்டதாலும், ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாலும் இந்த நிறுவனத்துக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பங்கு விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஏர் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.


