/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியிலும் அரசு கேபிள் "டிவி': முதல்வர் ரங்கசாமி அறிவிப்புபுதுச்சேரியிலும் அரசு கேபிள் "டிவி': முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியிலும் அரசு கேபிள் "டிவி': முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியிலும் அரசு கேபிள் "டிவி': முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியிலும் அரசு கேபிள் "டிவி': முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : செப் 03, 2011 01:46 AM
புதுச்சேரி : 'புதுச்சேரியிலும் அரசு கேபிள் 'டிவி' துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் ரங்கசாமி கூறினார்.புதுச்சேரி சட்டசபையில் நேற்று ஜீரோ நேரத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் பேசியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் புற்றீசல்போல் நூற்றுக்கும் மேற்பட்ட புதுப்புது சேனல்கள் வந்து கொண்டுள்ளன.
இந்த சேனல்கள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? கேபிள் 'டிவி' நடத்துவோர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவிதமாக 150 ரூபாய், 200 ரூபாய், 250 ரூபாய் என கட்டணம் வசூல் செய்கின்றனர். இதை முறைப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ அரசிடம் எந்தச் சட்டமும் இல்லை. அனைத்துத் தரப்பு மக்களும் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டண உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் அரசு கேபிள் 'டிவி'யை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்துள்ளார். மாதம் 70 ரூபாய் கட்டணத்தில், 90 சேனல்கள் தெரியும். நமது அரசும் பொது மக்களின் நலன் கருதி கேபிள் 'டிவி'யை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதுச்சேரியில் கேபிள் 'டிவி' கனெக்ஷன் வழங்குவதற்கு 2, 3 பேர் எம்.எஸ்.ஓ.,வாக உள்ளனர். இவர்கள், சேனல் நடத்தும் நபர்களிடம் மாதம் 75 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் என வசூல் செய்கின்றனர். இதன்மூலம் மாதத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் வருகிறது. ஆனால், அரசுக்குச் செலுத்த வேண்டிய கேளிக்கை வரியைக்கூட முறையாக செலுத்தவில்லை. பல ஆண்டுகளாக செலுத்த வேண்டிய வரி பாக்கியை நியாயமாக கணக்கெடுத்து பார்த்தால் 15 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. இரண்டு லட்சம் பேருக்கு மேல் கேபிள் இணைப்பு வைத்துள்ளனர். ஆனால் 10 ஆயிரம், 12 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே உள்ளதாக கணக்கு காட்டப்படுகிறது.பல சேனல்கள் தங்கள் இஷ்டத்திற்கு தனிப்பட்ட விருப்ப வெறுப்பின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுகின்றனர். இதை யார் கட்டுப்படுத்துவது... பல செய்திகளை மக்கள் மீது திணிக்கின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலையுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி தமிழக முதல்வர் துவக்கியுள்ள அரசு கேபிள் 'டிவி' போன்று, இங்கும், கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்கள் பாதிக்காத வகையில் அரசு கேபிள் 'டிவி'யை நடத்த வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, 'எம்.எல்.ஏ., கூறியுள்ள கருத்து உண்மையானது. அரசு கேபிள் 'டிவி' நடத்துவது தொடர்பான விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். விபரங்கள் கிடைத்த பின், நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


