ADDED : ஆக 22, 2011 10:59 PM
கோவை : கோவை அவிநாசி சாலை, பத்மாவதி கல்ச்சுரல் சென்டரில், கைவினைப்பொருள் கண்காட்சி துவங்கியுள்ளது.
கைவினைப்பொருள் அபிவிருத்தி ஆணையம், மத்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை, கோவை கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார். கைவினைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், 'காந்தி ஷில்ப் பஜார்' என்ற திட்டத்தில், ஆண்டு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்படும் இந்த கண்காட்சியானது, கோவையில் வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இங்கு, இந்தியா முழுவதும் இருந்து வந்துள்ள 150 பாரம்பரியம் மிக்க கைவினைஞர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. டோக்ரா காஸ்டிங், கற்சிலைகள், பனை ஓலைப்பொருட்கள், அப்லிக் ஒர்க்ஸ், லேக்கர்வேர், கார்ப்பெட்ஸ், டிரைபல் நகைகள், லெஸ் கிராப்ட்ஸ், உல்லன் கார்ப்பெட்ஸ், சணல் வேலைப்பாடுகள், மண் பாண்டங்கள், கண்ணாடி பொம்மைகள், பல வண்ண எம்ப்ராய்டரிங் சால்வைகள், மரத்தால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், வெண்கலச்சிலைகள், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி துவக்க விழாவில், கைவினைப்பொருள் அபிவிருத்தி ஆணையத்தின் தென் மண்டல இயக்குனர் ராமமூர்த்தி, சிறுதொழில் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜகோபால், கைவினைப்பொருள் விரிவாக்க உதவி இயக்குனர் தனசேகரன், காந்தி ஷில்ப் பஜார் ஒருங்கிணைப்பாளர் நீலவள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.