/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தமிழக குடிமகன்களுக்கு இலவச ஆட்டோ சர்வீஸ்தமிழக குடிமகன்களுக்கு இலவச ஆட்டோ சர்வீஸ்
தமிழக குடிமகன்களுக்கு இலவச ஆட்டோ சர்வீஸ்
தமிழக குடிமகன்களுக்கு இலவச ஆட்டோ சர்வீஸ்
தமிழக குடிமகன்களுக்கு இலவச ஆட்டோ சர்வீஸ்
ADDED : அக் 06, 2011 12:58 AM
திருக்கனூர் : புதுச்சேரியில் உள்ள சாராயக் கடைக்கு வரும் தமிழக குடிமகன்களின் தாக சாந்திக்காக இலவச ஆட்டோ இயக்கப்படுகிறது.
புதுச்சேரியிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருக்கனூர், பூகோள ரீதியாக தமிழகத்துடன் பின்னி பிணைந்துள்ளது. திருக்கனூர் சிறு பகுதியாக இருந்தாலும் இங்கு மதுக் கடைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. அரசின் தாராள அனுமதியால் திருக்கனூரில் ஒரே தெருவில் 3 அரசு ஒயின் ஷாப்புகள், 7 தனியார் ஒயின் ஷாப்கள், ஒரு சாராயக்கடை திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதால் தமிழகப் பகுதியில் இருந்து அதிக எண்ணிக்கையில் குடிமகன்கள் திருக்கனூர் சாராயக் கடைக்கு வந்து குடித்துவிட்டு செல்கின்றனர். 'பார்டர்' குடிமகன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சாராயக்கடையை ஏலம் எடுத்த உரிமையாளருக்கு தினமும் அமோக வசூல் வேட்டைதான். கல்லா 24 மணி நேரமும் நிரம்பி வழியும் மகிழ்ச்சியில், கடை உரிமையாளர் ஒருபடி மேலே போய்விட்டார். 'பொன் முட்டையிடும்' தமிழக குடிமகன்களை உற்சாகப்படுத்த திருக்கனூர் சாராயக் கடையில் இருந்து ராதாபுரம் வரை 6 கி.மீ தொலைவிற்கு மூன்று ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்து இலவச சேவையை அளித்து வருகிறார். தமிழக எல்லையில் அதிகாலையிலேயே தாக சாந்திக்கு காத்திருக்கும் குடிமகன்களை ஆட்டோக்கள் ராஜமரியாதையோடு அழைத்து வந்து சாராயக் கடையில் இறக்கி விடுகின்றன. போதை தலைக்கேறியதும், மீண்டும் அவர்களை ஆட்டோக்களில் அழைத்து சென்று ஏற்றிய இடத்திலேயே பவ்யமாக இறக்கிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து இலவச சர்வீஸ் ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், 'போதை தலைக்கேறியதும் தமிழக குடிமகன்கள் வீடுகளுக்கு செல்லாமல் சாராயக் கடையில் படுத்து விடுகின்றனர் அல்லது 'சுண்டல் கொடு... மீன் வறுவல் கொடு...' என ரகளையில் ஈடுபடுகின்றனர். இல்லையென்றால் தண்ணீர் பாம்பு போல் சாலையில் குறுக்கு நெடுக்குமாக நடந்து விபத்தில் அடிபட்டு இறக்கின்றனர். இதனை தவிர்க்கதான் குடிமகன்களின் பாதுகாப்புக்காக இப்படி செய்கிறோம்' என்றனர்.


