ஹசாரேவுக்கு ஆதரவு பெருகுவதால் அமைச்சர் கோபம்
ஹசாரேவுக்கு ஆதரவு பெருகுவதால் அமைச்சர் கோபம்
ஹசாரேவுக்கு ஆதரவு பெருகுவதால் அமைச்சர் கோபம்
ADDED : ஆக 22, 2011 11:05 PM

புதுடில்லி: 'பிரதமர் உள்ளிட்டவர்களை, லோக்பால் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள், மீடியாக்களில் நடைபெறும் ஊழல்கள் முறைகேடுகளையும் கருத்தில் கொண்டு, லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரும்படி, கோரிக்கை எழுப்பாதது மர்மமாக உள்ளது,' என்று அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி, அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியதாவது; அன்னா ஹசாரேவுக்கு மீடியாக்களின் பெரும் ஆதரவு காணப்படுகிறது. இந்த போராட்டத்தை, ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்துடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் இதைவிட அதுதான் பெரியது. மக்கள் கூட்டம் அதில்தான் அதிகம். மீடியாக்கள் பெரியளவில் இல்லாத அந்த காலகட்டத்தில் நடத்திய அந்த போராட்டமே மிகப்பெரியது. பிரதமர் அலுவலகத்தை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று பிடிவாதமாக பலரும் கூறுகின்றனர். மீடியாக்களும் இதற்கு முக்கியத்துவம் தருகின்றன. வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர விரும்பி, தற்போது குரல் கொடுக்கும் பலரும், மீடியாக்களை மட்டும் விட்டு வைத்துள்ளனர். மீடியாக்களில் ஏராளமான முறைகேடுகள், ஊழல்கள் எல்லாம் நடைபெறுகின்றன. மீடியா நிறுவனங்களும், மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவை. எனவே அவற்றையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக, அந்தக் கோரிக்கையை மட்டும் இன்னும் யாரும் எழுப்பாமல் உள்ளனர். இதன் பின்னணி மிகுந்த மர்மமாக உள்ளது.
லோக்பால் அமைப்பில், 11 பேர் உறுப்பினர்கள். இவர்களுக்கு அதிகம் வேலைப்பளு அளித்துவிட முடியாது. எனவே தான் அனைவரையுமே ஒரே விசாரணை அமைப்பிற்குள் கொண்டு வர வேண்டாமென கருதி, தனித்தனியாக அமைப்புகளை ஏற்படுத்தலாம் என்ற யோசனையும் உள்ளது. இப்போதுள்ள லோக்பால் உயர் அதிகாரமட்டத்தில் உள்ளவர்களை மட்டும் பொருந்தக் கூடியதாக ஏற்கலாம். கீழ் அளவிலான அதிகார மட்டத்திற்கு என, வேறு ஒரு விசாரணை அமைப்பும் உருவாக்கலாம். இவ்வாறு சர்மான் குர்ஷித் கூறினார்.