/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி ரயில்வே மேம்பால பணி 15ம் தேதி முதல் மீண்டும் துவக்கம்தென்காசி ரயில்வே மேம்பால பணி 15ம் தேதி முதல் மீண்டும் துவக்கம்
தென்காசி ரயில்வே மேம்பால பணி 15ம் தேதி முதல் மீண்டும் துவக்கம்
தென்காசி ரயில்வே மேம்பால பணி 15ம் தேதி முதல் மீண்டும் துவக்கம்
தென்காசி ரயில்வே மேம்பால பணி 15ம் தேதி முதல் மீண்டும் துவக்கம்
ADDED : செப் 08, 2011 01:06 AM
தென்காசி : தென்காசியில் நிறுத்தப்பட்ட ரயில்வே மேம்பால பணி மீண்டும் வரும் 15ம் தேதி துவக்கப்படும் என ஆர்.டி.ஓ.தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தென்காசி ரயில்வே மேம்பால பணி கடந்த 2009ம் ஆண்டு டிச.15ம் தேதி துவங்கியது. ரயில்வே கேட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் ராட்சத பில்லர்கள் அமைத்து கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இதன் மேல் சாலை அமைக்கப்பட வேண்டும். ரயில்வே கேட் பகுதியில் சுமார் 50 மீட்டர் நீளம் மட்டும் கான்கிரீட் அமைக்க வேண்டும். கடந்த ஜூன் 14ம் தேதி பணி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உரிய நேரத்தில் ரயில்வே துறையில் இருந்து அனுமதி கிடைக்காததால் ரயில்வே மேம்பால பணி கடந்த மே மாதம் நிறுத்தப்பட்டது. சர்வீஸ் ரோடு அமைக்கப்படாமல் ரயில்வே மேம்பால பணி மேற்கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே மேம்பால பணி நிறுத்தப்பட்டதும் பொதுமக்களின் அவதி மேலும் அதிகரித்தது. இதுபற்றி பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து விரைவில் மேம்பால பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தென்காசி வர்த்தக சங்கம் சார்பில் ரயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க கோரியும், சர்வீஸ் ரோடு அமைக்க வலியுறுத்தியும் கடந்த 6ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்நிலையில் எம்.எல்.ஏ.,சரத்குமார் மாவட்ட கலெக்டர் செல்வராஜை சந்தித்து மேம்பால பணியை விரைவு படுத்த வலியுறுத்தினார். இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின்படி தென்காசி ஆர்.டி.ஓ.காங்கேயன் கென்னடி தலைமையில் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தாசில்தார் ராஜையா, ரயில்வே பொறியாளர் சுப்பிரமணியன், நகராட்சி கமிஷனர் செழியன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட அதிகாரி சமுத்திரக்கனி, மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் அருள், டி.எஸ்.பி.பாண்டியராஜன், இன்ஸ்பெக்டர் திருப்பதி, தென்காசி வர்த்தக சங்க தலைவர் ராமலிங்கம், பொருளாளர் ஜெயராமன், செயலாளர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்னும் ஓரிரு நாட்களில் நகராட்சி சார்பில் ரயில்வே ரோட்டில் குடிநீர் பைப் லைன் அமைக்கப்பட்டு விடும் என நகராட்சி கமிஷனர் கூறினார். 13ம் தேதிக்குள் ரயில்வே ரோட்டில் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு விடும் என மின்வாரிய அதிகாரிகள் கூறினர். 15ம் தேதி முதல் மேம்பாலத்திற்கு தடுப்பு சுவர் கட்டும் பணி மீண்டும் துவக்கப்படும். மேலும் சர்வீஸ் ரோடு பணியும் துவங்கி விடும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறினார். கடந்த வாரம் ரயில்வே துறை தலைமை நிர்வாக அதிகாரி விஜயகுமார் தென்காசிக்கு வந்து மேம்பால பணி குறித்து ஆய்வு செய்தார். பணிக்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு வரும் அக்.15ம் தேதி முதல் மேம்பால பணி துவக்கப்படும். பணி முடிய 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம் என ரயில்வேதுறை அதிகாரி கூறினார். இதுபற்றி ஆர்.டி.ஓ.காங்கேயன் கென்னடி கூறும்போது, 'அரசு துறை அதிகாரிகள் உறுதி அளித்தபடி மேம்பால பணிகள் நடக்கும். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் மேம்பால பணி முழுமை பெற்று விடும்' என்றார்.


