/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"சரியான சிகிச்சை வசதியின்றி உயிரிழக்கும் சிறுநீரக நோயாளிகள்'"சரியான சிகிச்சை வசதியின்றி உயிரிழக்கும் சிறுநீரக நோயாளிகள்'
"சரியான சிகிச்சை வசதியின்றி உயிரிழக்கும் சிறுநீரக நோயாளிகள்'
"சரியான சிகிச்சை வசதியின்றி உயிரிழக்கும் சிறுநீரக நோயாளிகள்'
"சரியான சிகிச்சை வசதியின்றி உயிரிழக்கும் சிறுநீரக நோயாளிகள்'
ADDED : ஆக 21, 2011 11:53 PM
கோவை : ''சிறுநீரகம் பழுதுபட்ட 40 சதவீதம் பேர், சரியான சிகிச்சையில்லாமல்
உயிரிழக்கின்றனர்'' என, கோவை மாவட்ட லயன்ஸ் கிளப் ஆளுநர் பரமேஸ்வரன்
தெரிவித்தார். பன்னாட்டு லயன்ஸ் கிளப்களின் கோவை அமைப்பு சார்பில், லயன்ஸ்
டயாலிசிஸ் சென்டர் திட்டத்தின் துவக்க விழா, ஆவாரம்பாளையம் வேலுமணியம்மாள்
அரங்கில் நேற்று நடந்தது. இத்திட்டம் குறித்து மாவட்ட லயன்ஸ் கிளப் ஆளுநர்
பரமேஸ்வரன் கூறியதாவது: இன்றைய சூழலில் சிறுநீரகம் பழுதுபட்ட நோயாளிகளில்,
90 சதவீதம் பேர் இறுதி கட்டத்தில் தான் டாக்டரை சந்திக்கின்றனர். இதில்,
20 சதவீதம் பேர் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். 30 சதவீதம்
பேர், ஏதாவதொரு வகையில் உதவி பெற்று சிகிச்சை பெற்றாலும், மீதமுள்ளவர்கள்
சரியான சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்கின்றனர், என ஒரு புள்ளி விபரம்
தெரிவிக்கிறது. இதற்கு பொருளாதார நிலை தான் முக்கிய காரணமாக உள்ளது.
பொதுவாக ஒரு முறை டயாலிசிஸ் சிகிச்சை செய்ய ரூ.1,500 செலவாகிறது. மாதத்தில்
8 முறைக்கு மேல் டயாலிசிஸ் செய்யும் போது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம்
வரை தேவைப்படுகிறது. நடுத்தர குடும்பங்களின் மொத்த வருமானமே அந்தளவுக்கு
இருப்பதில்லை. இந்நிலையில் வாரம் ஒரு முறையாவது டயாலிசிஸ் செய்யாவிட்டால்
உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவே
இத்திட்டத்தை கையிலெடுத்தோம். நாங்கள் துவக்கவுள்ள லயன்ஸ் டயாலிசிஸ்
சென்டரில், ரூ.500 முதல் ரூ.600க்குள் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கவுள்ளோம்.
தகுதியானவர்களுக்கு இலவசமாகவும் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை
வழங்கப்படும். கட்டட பணிகள் முடிந்தவுடன் டயாலிசிஸ் சென்டர் விரைவில்
செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார். தொடர்ந்து, விழாவிற்கு வந்திருந்தவர்களிடம்
திட்டத்திற்கான நன்கொடை உதவி பெறும் நிகழ்ச்சி நடந்தது. அதற்கான குலுக்கலை
அரோமா குழும தலைவர் பொன்னுசாமி, ஆனந்த் பழனிசாமி குழும தலைவர் ஆனந்த்
ஆகியோர் துவக்கி வைத்தனர். திட்ட வரைபடத்தை செந்தில் குழும தலைவர்
ஆறுமுகசாமி திறந்து வைத்தார். இதில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள்,
உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


