இந்திய கடல்சார் பல்கலை துணைவேந்தர் நியமனம்:எதிர்ப்பு மனு தள்ளுபடி
இந்திய கடல்சார் பல்கலை துணைவேந்தர் நியமனம்:எதிர்ப்பு மனு தள்ளுபடி
இந்திய கடல்சார் பல்கலை துணைவேந்தர் நியமனம்:எதிர்ப்பு மனு தள்ளுபடி
ADDED : ஆக 27, 2011 11:50 PM

சென்னை:இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் விஜயன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் துணைவேந்தராக டாக்டர் பி.விஜயன் நியமிக்கப்பட்டார்.
இவரது நியமனத்தை எதிர்த்து, ஐகோர்ட்டில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடல்சார் நிர்வாகம், பொது நிர்வாகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் நிபுணத்துவம் பெற்று, பி.எச்.டி., முடித்தவர்களையே பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க முடியும். சட்டப்படி தேர்வுக் குழுவை அமைக்காமல், டாக்டர் விஜயனை துணைவேந்தராக ஜனாதிபதி நியமித்துள்ளார். மூன்று பேர் அடங்கிய பட்டியலும் தயாரிக்கப்படவில்லை.
துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விஜயன், சிறந்த கல்வியாளர் அல்ல. அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, எந்த அதிகாரத்தின் கீழ் பதவி வகிக்கிறார் என, அவரிடம் விளக்கம் பெற வேண்டும். துணைவேந்தர் பதவியை காலியாக வைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை சார்பில், ஹாஜா முகைதீன் கிஸ்தி, துணைவேந்தர் டாக்டர் விஜயன் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி, வழக்கறிஞர் மெய்கண்டான் ஆஜராகினர். நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:
தேர்வுக் குழுவை அமைத்து, மூன்று பேர் அடங்கிய பட்டியலை அனுப்ப வேண்டிய தேவையில்லை. துணைவேந்தராக டாக்டர் விஜயன் நியமிக்கப்பட்ட பின், தேர்வு விதிமுறைகள் அமலுக்கு வந்தன. எனவே, அந்த விதியை அமல்படுத்த வேண்டும் என, மனுதாரர் வற்புறுத்த முடியாது. பல்கலைக்கழகம் கையாளும் விதிமுறைகள், துணைவேந்தர் நியமனத்துக்குப் பின்னரே கொண்டு வரப்பட்டன.
துணைவேந்தர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து, இந்த ரிட் மனுவில் முடிவெடுக்க முடியாது. மனுதாரர் கோரியபடி நிவாரணம் வழங்க முடியாது. தகுதியிழப்புக்கான சட்டப்பூர்வ காரணங்கள் இல்லாத போது, அவரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது. அதேநேரத்தில், முறைகேட்டில் பங்கு கொண்டாரா என்பது குறித்த பிரச்னையை, மத்திய அரசு தான் பரிசீலிக்க வேண்டும்.
பதில் மனுவில், புலனாய்வு ஏஜன்சியிடம் இருந்து, தங்களுக்கு அறிக்கை எதுவும் வரவில்லை என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அறிக்கை வந்தால், அதன் மீது நடவடிக்கை எடுப்பது அரசைப் பொறுத்தது. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.


