Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாசன நீர் திறப்பால் தடையின்றி மும்முனை மின்சாரம் : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பாசன நீர் திறப்பால் தடையின்றி மும்முனை மின்சாரம் : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பாசன நீர் திறப்பால் தடையின்றி மும்முனை மின்சாரம் : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பாசன நீர் திறப்பால் தடையின்றி மும்முனை மின்சாரம் : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : ஆக 28, 2011 01:19 AM


Google News

ஈரோடு: பவானிசாகர் அணை, மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.



கலெக்டர் காமராஜ் தலைமை வகித்தார். கூட்ட விவாதம்: கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி: கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15ம் தேதி நீர் திறக்கப்பட்டது. அணை நீர் உழவுக்கு போதிய அளவில் இருக்காது. கிணற்று நீரை சேர்த்துதான் பயன்படுத்தி வருகிறோம். நடவுப் பணி முடியும் வரை மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும்.

மேட்டூர் வலதுகரை பாசன விவசாயிகள் சங்கம் பழனிசாமி: மேட்டூர் அணை வலதுகரை கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சில நாளில் நடவு பணி ஆரம்பிக்க உள்ளது. குறைந்தது 15 நாளுக்காவது மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும்.

மின்வாரிய அதிகாரி: காற்றாலை மின்சாரம் அதிகமாக கிடைக்கும்போது பகலில் ஆறு மணி நேரம் என்றும், காற்றாலை மின்சாரம் கிடைக்காத போது நான்கு மணி நேரமும், இரவில் ஆறு மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நல்லசாமி: நடவு பணி ஆரம்பித்த நிலையில் அடியுரமாக போடப்படும் பொட்டாஷ் கையிருப்பில் இல்லை. மாட்டுச்சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளுக்கு ஒரு சுங்க பணமும், விற்ற மாடுகளை கொண்டு செல்லும் போது ஒரு சுங்க பணமும் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.

கலெக்டர்: முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன சங்கம் தளபதி: எங்கள் பகுதியில் நெல் அறுவடை துவங்கி விட்டது. பத்து இடங்களில் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டும்.

இரண்டு ஆண்டாக கிலோ பெரிய ரக அரிசி 10.50 ரூபாய்க்கும், சன்ன ரக அரிசி 11.10 ரூபாய்க்கும் அரசு கொள்முதல் செய்கிறது. வேளாண் அமைச்சரிடம், கலெக்டர் பேசி நெல் கொள்முதல் ஆதார விலையை உயர்த்தி தர வேண்டும்.

அன்னிய செலவாணியை மிச்சப்படுத்த நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்கள் இறக்குமதியை அரசு குறைத்துள்ளது.

அதற்கு பதிலாக இரண்டாம் நிலை நுண்ணூட்டங்களை பயன்படுத்த தெரிவித்துள்ளது. சிலர், இந்த நுண்ணூட்டங்களை தரமின்றி தயாரித்து, உரக்கடையிலும் விற்கின்றனர்.

வேளாண் அதிகாரி: உரக்கடைகளில் சோதனை நடத்தி, அனுமதியில்லாத, கலப்பட உரங்கள், நுண்ணூட்டங்கள் விற்பது தடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us