போலி என்கவுன்டரில் ஈடுபடும் போலீசாருக்கு தூக்கு :சுப்ரீம் கோர்ட் அதிரடி
போலி என்கவுன்டரில் ஈடுபடும் போலீசாருக்கு தூக்கு :சுப்ரீம் கோர்ட் அதிரடி
போலி என்கவுன்டரில் ஈடுபடும் போலீசாருக்கு தூக்கு :சுப்ரீம் கோர்ட் அதிரடி
ADDED : ஆக 09, 2011 02:18 AM
புதுடில்லி : 'போலி என்கவுன்டர்களில் ஈடுபடும் போலீசாருக்கு, தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல தாதா தாரா சிங், 2006ம் ஆண்டில், அம்மாநில சிறப்பு போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதை எதிர்த்து<, அவரது மனைவி சுசிலா தேவி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 'என் கணவரை, போலீசார் கடத்திச் சென்று, கொடூரமாக சுட்டுக் கொன்று விட்டனர். இது போலி என்கவுன்டர்; இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, பிரசாத் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: சட்டத்தின் பாதுகாவலர்களாகக் கருதப்படும் போலீசார், பொதுமக்களை பாதுகாப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களை ஒழித்துக் கட்டுவதற்காக, அவர்கள் பணியாற்றக்கூடாது. போலி என்கவுன்டரில், சுட்டுக் கொல்வதை ஏற்க முடியாது.சாதாரண மக்கள் குற்றம் செய்தால், அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், போலீசார் இந்த குற்றத்தைச் செய்தால், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏனெனில், போலி என்கவுன்டர் என்பது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிக்கு முற்றிலும் முரணானது. போலி என்கவுன்டரில் ஈடுபடும் போலீசாருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ராஜஸ்தான் உயர் போலீஸ் அதிகாரிகள் இருவரும், உடனடியாக சரணடைய வேண்டும். இல்லையெனில், அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டிய பொறுப்பு, சி.பி.ஐ., அதிகாரிகளைச் சேர்ந்தது. ஏனெனில், அவர்கள் தான், இந்த வழக்கை விசாரிக்கின்றனர். என்கவுன்டர் என்ற பெயரில், ரத்தத்தை உறைய வைக்கும் வகையிலான கொலைகளை செய்யக்கூடாது என, போலீசாரை இந்த கோர்ட் எச்சரிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.


