Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோடையை மிஞ்சியது கொளுத்தும் வெயில் : கோவையை சூழப்போகுது பிரசாரப்புயல்

கோடையை மிஞ்சியது கொளுத்தும் வெயில் : கோவையை சூழப்போகுது பிரசாரப்புயல்

கோடையை மிஞ்சியது கொளுத்தும் வெயில் : கோவையை சூழப்போகுது பிரசாரப்புயல்

கோடையை மிஞ்சியது கொளுத்தும் வெயில் : கோவையை சூழப்போகுது பிரசாரப்புயல்

ADDED : அக் 06, 2011 09:37 PM


Google News
கொளுத்தும் வெயிலை போலவே, கோவை தேர்தல் பிரசாரக் களத்திலும் அனல் வீசத் துவங்கி விட்டது. 'தலைவர்கள் வருகையை முன்னிட்டு, தெருமுனைக்கூட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடக்கவிருப்பதால், வரும் வாரத்தில், பிரசாரம் மேலும் சூடுபிடிக்கும்' என, எதிர்பார்க்கின்றனர், அரசியல் கட்சியினர். கோவையில் கடந்த சில நாட்களாக, வெயில் உக்கிரம் அனைவரையும் வாட்டியெடுக்கிறது. 'அக்னி நட்சத்திரம் மீண்டும் வந்து விட்டதோ' என்று எண்ணும்படியாக, தார் சாலைகள் உருகும் அளவுக்கு, வெயிலின் கடுமை இருக்கிறது. இதில், அதிகம் பாதிக்கப்படுவது, தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் வேட்பாளர்கள் தான். 'இருக்கும் குறைந்த நாட்களுக்குள், அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவிட வேண்டுமே' என்ற அவசரத்தில் கிளம்பி, வெயிலில் வறுபடுகின்றனர், முக்கிய கட்சிகளின் மேயர் வேட்பாளர்கள். களத்தில் 27 பேர் இறங்கினாலும், கோவை மேயர் பதவியை பிடிப்பதில் முக்கிய போட்டி என்னவோ, அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்கள் இடையில் தான். அ.தி.மு.க., வேட்பாளர் வேலுச்சாமி, அமைச்சராகவும், எம்.எல்.ஏ., ஆகவும் இருந்த அனுபவம் உடையவர். 'அம்மாவின் பெயர் மட்டுமே வெற்றியை தந்து விடும்' என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க., வேட்பாளர், பகுதி வாரியாகச்சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். வேட்பாளருடன், தொழில் துறை அமைச்சர், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகள் முழு நேரமும் உடன் இல்லா விட்டாலும், தி.மு.க., வேட்பாளர் கார்த்திக்கின் பிரசாரம், முழு வீச்சில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவருக்கு ஆதரவாக, முன்னாள் எம்.பி., ராமநாதனும், அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகளும் பிரசாரம் செய்து வருகின்றனர். 'மாநகராட்சி விவகாரங்களில் இருக்கும் நீண்ட அனுபவமும், அவர் சார்ந்துள்ள சமூகத்தின் ஓட்டுகளும், தி.மு.க., மேயர் வேட்பாளருக்கு பலம் சேர்க்கும்' என்பது, அக்கட்சியினரின் அசராத நம்பிக்கை. தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளர் சிவஞானத்தின் பிரசாரமும், நாள் முழுவதும், தொய்வின்றி நடக்கிறது. அவருக்காக, தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகளும், கோவை எம்.பி., நடராஜனும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்சிகளுடன் ஒப்பிடும்போது, காங்கிரஸ், பா.ஜ., வேட்பாளர்களின் பிரசாரத்தில் வேகம் குறைவு தான். தேசிய, மாநில நிர்வாகிகள் வந்து பிரசாரம் செய்தால் மட்டுமே, காங்கிரஸ், பா.ஜ., கட்சிகள் தேர்தல் களத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் ஒன்பது நாட்களே அவகாசம் இருப்பதால் பிரசாரத்தை வேகப்படுத்த, அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். 'முக்கிய கட்சிகளின் பிரசாரத்தில், இப்போதே அனல் பறக்கத்துவங்கி விட்டது. தலைவர்கள் வருகை, பொதுக்கூட்டம் என வரும் வாரத்தில், கோவை மேயர் தேர்தல் களம், கொளுத்தும் வெயிலுக்கு ஈடாக சூடு பிடிக்கும்' என, எதிர்பார்க்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள்.

-நமது நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us