Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பொட்டு சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : அடுத்தது யார்?

பொட்டு சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : அடுத்தது யார்?

பொட்டு சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : அடுத்தது யார்?

பொட்டு சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : அடுத்தது யார்?

ADDED : ஜூலை 25, 2011 10:39 PM


Google News
Latest Tamil News

மதுரை : மதுரையில் நிலமோசடி வழக்கில் கைதான தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ்(சுரேஷ்பாபு) மீது குண்டர் சட்டம் நேற்று பாய்ந்தது.

இதற்கிடையே, மற்றொரு வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, வேங்கட சமுத்திரத்தைச் சேர்ந்தவர் சிவனாண்டி; மனைவி பாப்பா. இவர்களுக்கு திருமங்கலம் அருகே செங்குளத்தில் 5.14 ஏக்கர் நிலம் உள்ளது. இதை மோசடி செய்து அபகரித்ததாக, பொட்டு சுரேஷ், நகர் செயலர் தளபதி உட்பட 4 பேர், ஜூலை 19 ல், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் மதுரை அண்ணாநகர் அமர்நாத் என்பவரிடம், 51 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து, அபகரித்ததாக, பொட்டு சுரேஷ் உட்பட 6 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் மீது தொடர்ந்து புகார்கள் வர ஆரம்பித்துள்ளன.



இதன் காரணமாகவும், புகார்தாரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனக் கருதியும், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., ஆஸ்ரா கர்க் பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில், அவரைக் கைது செய்ய கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். இதன் நகலை நேற்று காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை சிறையில் உள்ள பொட்டு சுரேஷிடம் வழங்கிய போலீசார், அமர்நாத் நிலத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்தனர். இவரைத் தொடர்ந்து, அட்டாக் பாண்டியையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீசார் தீவிரமாக உள்ளனர். தி.மு.க., நிர்வாகிகள் பலரும், நிலமோசடி வழக்கில் கைதாகி வரும் நிலையில், தங்கள் மீதும் குண்டர் சட்டம் பாயுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.



ஓராண்டா? ஆறு மாதமா?



ஒருவர் மீது, குறைந்தது மூன்று வழக்குகள் பதிவானால் மட்டுமே, குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என்ற விதி இதுவரை பின்பற்றப்பட்டது. கடந்த மாதம் வழக்கு ஒன்றில், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றால் ஒரு வழக்கில் கைதானவரைக் கூட முன்னெச்சரிக்கையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இதன்படியே பொட்டு சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுவாக, இச்சட்டத்தின்கீழ் கைதானவர்கள் ஓராண்டு வரை ஜாமினில் வெளியே வர முடியாது. இவர்களை விடுவிப்பதா, வேண்டாமா என ஒன்றரை மாதங்களுக்குப் பின் சென்னையில் கூடும் நீதிபதிகளைக் கொண்ட அறிவுரைக் குழுமம் விசாரிக்கும்.



'கைது உறுதி செய்யும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். இந்த நடைமுறைகள் எல்லாம் நடந்து முடிவதற்குள், குறைந்தது ஆறு மாதங்களாகி விடும்' என்கின்றனர் போலீசார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us