ADDED : ஜூலை 13, 2011 10:06 PM
பரமக்குடி : பரமக்குடியில் ஆற்றுப்பாலம் கட்டும் பணிக்கான மின்வயர்கள் பாதுகாப்பின்றி சென்றதால் அதில் சிக்கிய இரண்டு மாடுகள் பலியாயின.
பரமக்குடி வைகை ஆற்றுப்பாலத்தில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் அமைக்க தோண்டப்பட்ட ராட்சத குழிகளில் இருந்து வெளியான சகதிகள் அனைத்தும் தரைப்பாலத்தின் அருகிலேயே கடத்தினர். இதனால் ஏற்கெனவே அந்த வழியாக சென்ற கால்நடைகள் சகதியில் சிக்கின.
இதே போல் எமனேஸ்வரம், இளையான்குடி, திருச்சி, சென்னை போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்களும் ஆபத்தான முறையில் சென்றன. இந்நிலையில் தடுப்புகள் இல்லாத பாலத்தில் தனியார் பஸ் ஒன்று சகதிக்குள் சிக்கி அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர். இந்நிலையில் பாலம் பணிக்காக மின்வயர்கள் ஆற்றின் நடுவிலேயே போட்டு பாதுகாப்பின்றி உள்ளன. நேற்று திருட்டு மணல் அள்ள சென்ற மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற நகரகுடியைச் சேர்ந்த வைகை நகரில் வசித்து வரும் வளையானந்தம்(45) என்பவரது இரண்டு மாடுகளும் மின்வயரில் சிக்கி பலியாயின. வளையானந்தம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.


