பத்மநாப சுவாமி கோவிலுக்கு சிறப்பு பாதுகாப்பு குழு : மாநில அரசு தேவஸ்வம் துறை அமைச்சர் தகவல்
பத்மநாப சுவாமி கோவிலுக்கு சிறப்பு பாதுகாப்பு குழு : மாநில அரசு தேவஸ்வம் துறை அமைச்சர் தகவல்
பத்மநாப சுவாமி கோவிலுக்கு சிறப்பு பாதுகாப்பு குழு : மாநில அரசு தேவஸ்வம் துறை அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம் : 'பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் பாதுகாப்பிற்கென சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது' என்று, கேரள சட்டசபையில் தேவஸ்வம் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
இதனால், கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுள்ளது. கேரள சட்டசபையில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், நேற்று முன்னாள் அமைச்சர் கோடியேறி பாலகிருஷ்ணன் பேசுகையில், 'பத்மநாப சுவாமி கோவிலில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதா? அப்படி போடப்பட்டிருந்தால், எவ்வாறு பக்தைகளிடம் இருந்து, தங்க சங்கிலி போன்ற பொருட்கள் களவு போகின்றன' என, கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த, கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் வி.எஸ்.சிவக்குமார் கூறியதாவது: பத்மநாப சுவாமி கோவிலில் பக்தர்கள் எந்தவித இடையூறின்றி, சுவாமி தரிசனம் செய்ய வசதியாகவும், கோவில் ஆசார அனுஷ்டானங்களுக்கு பங்கமின்றியும், கோவில் சொத்துக்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில போலீசார் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் டி.ஜி.பி., வேணுகோபால் நாயர் தலைமையில், நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., ஹேமசந்திரன், ஐ.ஜி., அனந்தகிருஷ்ணன், சரக ஐ.ஜி., பத்மகுமார் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
போலீசார் மூன்று 'ஷிப்டு' களில் பணியாற்றி வருகின்றனர். கோவிலுக்கு உள்ளே, 53 போலீசாரும், 73 பேர் கோவிலுக்கு வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலின் சொத்துக்களை பாதுகாக்கவே போலீஸ் படை அங்கு பணியில் உள்ளது. அவ்வாறு இருந்தும் கூட சங்கிலிப் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.


