/உள்ளூர் செய்திகள்/சென்னை/இடம் பெயர்வோரால் சென்னையின் மக்கள் தொகை அதிகரிப்புஇடம் பெயர்வோரால் சென்னையின் மக்கள் தொகை அதிகரிப்பு
இடம் பெயர்வோரால் சென்னையின் மக்கள் தொகை அதிகரிப்பு
இடம் பெயர்வோரால் சென்னையின் மக்கள் தொகை அதிகரிப்பு
இடம் பெயர்வோரால் சென்னையின் மக்கள் தொகை அதிகரிப்பு
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இடம் பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்க வேண்டிய பல அரசு அலுவலகங்கள் தேவையில்லாமல் சென்னையில் இயங்கிக் கொண்டிருப்பதாலும், மக்கள் நெரிசல் அதிகமாகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினசரி சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகம்.கால்நடை ஆராய்ச்சி, கோழி வளர்ப்பு, தமிழ் வளர்ச்சி, விவசாய துறை என பல அரசு துறைகள் ஆராய்ச்சி நிறுவனங்கள் திருவண்ணாமலை, நாமக்கல், மதுரை, தஞ்சாவூர் போன்ற நகரங்களில் இயங்க வேண்டும். ஆனால், சென்னை நகரில் இயங்க அவசியம் இல்லாத பல துறைகள், அரசு அலுவலகங்கள் இன்னமும் இங்கு இயங்கிக் கொண்டிருக்கின்றன.இப்படி, பல்வேறு காரணங்களால் சென்னை நகரின் மக்கள் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதில், அரசு மிகப் பெரிய சவாலை சந்தித்து வருகிறது.மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும்,தொழில் நிறுவனங்களை துவக்க ஏற்பாடு செய்தால் சென்னை நகருக்கு இடம் பெயர்வோரை தடுக்க முடியும். தமிழகத்தில் தொழில் துவங்க விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைக்கு அருகிலேயே விமான நிலையம், துறைமுகம், சிறப்பான சாலை வசதி, தடையற்ற மின்சாரம், குடிநீர் வசதி ஆகியவற்றை எதிர்பார்க்கின்றன.தற்போது மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடலூர், குளச்சல், நாகை உள்ளிட்ட சிறிய துறைமுகங்களும் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துள்ளன.எனவே, வெளிநாட்டு நிறுவனங்களை, பிற மாவட்டங்களிலும் தொழில் துவங்குமாறு அரசு வலியுறுத்த வேண்டும்.
இதற்கு நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளை மேம்படுத்த வேண்டியதும், சரக்கு ரயில் போக்குவரத்தை ஒருங்கிணைக்க வேண்டியதும் மிக அவசியம்.சென்னையில் இயங்க வேண்டிய அவசியம் இல்லாத அரசு துறைகளை, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மாற்றுவதன் மூலம், சென்னையின் நெரிசல் ஓரளவிற்கு குறையும். இதன் மூலம் அரசுக்கு போக்குவரத்து செலவினமும் மீதமாகும். இதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து பேசிய,பெயர் வெளியிட விரும்பாத அரசுத் துறை அதிகாரி, ''துணை நகரங்களை உருவாக்குவதன் மூலம் தற்போது சென்னை நகரில் நிலவும் நெரிசலை சமாளிக்கலாம். புறநகரில் புதிய குடியிருப்புக்களை உருவாக்கும் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தலாம்.
குடிநீர் தேவையை சமாளிக்க சென்னைக்கு அருகில் உள்ள நீர் ஆதாரங்களை கண்டறிந்து, அங்கிருந்து நீர் பெற இப்போதே திட்டமிட வேண்டும்.மாவட்டங்களில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தருவது போல் பல்வேறு சலுகைகளை தரலாம். இதன் மூலம் கிராமங்களில் கூட தொழிற்சாலைகள் உருவாகும். மாநிலத்தை மண்டலங்களாக பிரித்து, அங்கு துணை தலைமை செயலகங்களை உருவாக்குவதன் மூலம் சென்னைக்கு வரும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம்,'' என்றார்.சென்னை நகரின் மக்கள் தொகை 65 லட்சம். புறநகரை உள்ளடக்கிய சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 82லட்சம்.சென்னை மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் இடம் பெயர்ந்து வந்தவர்கள். இதில், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் 74.5 சதவீதம்; மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 23.8; வெளிநாடுகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் 1.7 சதவீதம்.வரும் 2026ல் நகரின் ஒருநாள் குடிநீர் தேவை 224.8 கோடி லிட்டராக இருக்கும். தற்போதுள்ள நீர் ஆதாரங்களின் அடிப்படையில் அப்போது 71 கோடி லிட்டர் பற்றாக்குறை நிலவும்.நகரின் சேரிப் பகுதிகளில், அடிப்படை வசதிகள் இல்லாமல் கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
எஸ்.உமாபதி


