/உள்ளூர் செய்திகள்/சென்னை/கடன் காப்புறுதி திட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்கடன் காப்புறுதி திட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்
கடன் காப்புறுதி திட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்
கடன் காப்புறுதி திட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்
கடன் காப்புறுதி திட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்
மத்திய அரசின், கடன் காப்புறுதி திட்டம் குறித்து, புதிதாக தொழில் துவங்க விரும்புவோரிடம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, குறு, சிறு தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாடு முழுவதும் குறு, சிறு தொழில் செய்ய விரும்புவோருக்கு, கடன் உதவி வழங்குவதற்காக, மத்திய அரசு, கடந்த 2000ம் ஆண்டு, ஆக., மாதம், கடன் காப்புறுதி திட்டத்தை அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தில், 5 லட்சம் ரூபாய் வரை உள்ள கடனுக்கு, 85 சதவீதம் (4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை) காப்புறுதி வழங்கப்படுகிறது. அடுத்து, 5 லட்சத்திலிருந்து 50 லட்சம் ரூபாய் வரை உள்ள கடன்களுக்கு 75 சதவீதம், 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை உள்ள கடனுக்கு 50 சதவீதம் காப்புறுதி வழங்கப்படுகிறது. பொதுத் துறையைச் சேர்ந்த 20 வங்கிகள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கீழ் செயல்படும் வங்கிகள், தனியார் துறையைச் சேர்ந்த 19 வங்கிகள், 4 வெளிநாட்டு வங்கிகள், 63 மண்டல கிராம வங்கிகள், மாநில அரசுகளின் தொழில் முதலீட்டு கழகங்கள் என, நாடு முழுவதும் 126 வங்கிகள், கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமும், கடன் காப்புறுதி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடக்கத்தில் வங்கிகள், கடன் காப்புறுதி திட்டத்தின் கீழ் கடன் வழங்க தயக்கம் காட்டின. பின்னர், அதிக தொழில்முனைவோர் வருகை, தொடர் கோரிக்கைகள் போன்றவற்றால், கடன் வழங்க முன் வந்தன.இத்திட்டம், துவங்கியதிலிருந்து, கடந்த மார்ச் மாதம் வரை, நாடு முழுவதும் 5 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு, 23 ஆயிரத்து 850 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவதில், உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
இங்கு, 80 ஆயிரத்து 500 நபருக்கு, 2,554 கோடி ரூபாய் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் 55 ஆயிரம் பேருக்கு, 2,000 கோடி ரூபாய், கேரளாவில் 53 ஆயிரம் பேருக்கு, 1,196 கோடி ரூபாய், தமிழகத்தில், 50 ஆயிரம் பேருக்கு 1,956 கோடி ரூபாய், கர்நாடகாவில், 39 ஆயிரம் பேருக்கு 1,985 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், செயல்பட்டு வரும் பெரிய வங்கிகள் அனைத்தும், மற்ற வர்த்தக நடவடிக்கைகளில், அதிக கவனம் செலுத்துவதால், இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதை கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக செயல்படும் தாய்கோ வங்கியை, இத்திட்டத்தில் இணைத்தால், குறு, சிறு தொழில்முனைவோர் அதிக அளவில் பயனடைவர். மேலும், இத்திட்டம் குறித்து, தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களிடையே, மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இது குறித்து, குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் பிரதிநிதி வேலன் கூறியதாவது:தொழில்முனைவோர், பல காரணங்களால் தாங்கள் தொடங்கிய தொழிலை நடத்த முடியாமல், நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர். கடன் காப்புறுதி திட்டத்தின் கீழ், கடன் வழங்கிய வங்கிக்கு, பெருமளவு பணத்தை, 'கிரெடிட் கேரண்டி பண்ட் டிரஸ்ட்' அமைப்பு திரும்ப கொடுத்து விடுகிறது. எனினும், தொழிலில் நலிந்து விட்ட தொழில் முனைவோர் மீது, கடன் கொடுத்த வங்கிகள், வழக்கு தொடர வேண்டும் என, அந்த அமைப்பு வலியுறுத்துவதாக, வங்கி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சொத்துக்களை ஜப்தி செய்த பின்னரும், வழக்கு தொடர்வது சரியல்ல. இதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு வேலன் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -


