/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/மாறி, மாறி போஸ்டர் ஒட்டியதால் எரிச்சலில் புதுகை பொதுமக்கள்மாறி, மாறி போஸ்டர் ஒட்டியதால் எரிச்சலில் புதுகை பொதுமக்கள்
மாறி, மாறி போஸ்டர் ஒட்டியதால் எரிச்சலில் புதுகை பொதுமக்கள்
மாறி, மாறி போஸ்டர் ஒட்டியதால் எரிச்சலில் புதுகை பொதுமக்கள்
மாறி, மாறி போஸ்டர் ஒட்டியதால் எரிச்சலில் புதுகை பொதுமக்கள்
ADDED : ஜூலை 14, 2011 12:08 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர் ஒட்டிய
தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக
நகராட்சி நிர்வாகத்தை பாராட்டி அ.தி.மு.க., வினர் போஸ்டர் ஒட்டியுள்ள
சம்பவம் நகர்ப்பகுதியினரை எரிச்சலடையச் செய்துள்ளது. புதுக்கோட்டை
பஞ்சாயத்து பகுதிகளை நகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து
நகராட்சிவசம் தற்போது உள்ள 39 வார்டுகளை 37 வார்டுகளாக குறைக்க நகராட்சி
நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு தி.மு.க., மற்றும் காங்கிரஸ்
கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வார்டுகளை குறைக்கும் முடிவை
கண்டித்தும், கைவிடக்கோரியும் நகராட்சி அலுவலகம் முன் அக்கட்சியினர் கண்டன
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக
நகர்ப்பகுதி முழுவதும் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டது. இதற்கு பதிலடி
கொடுக்கும் விதமாக புதுக்கோட்டை கிராமப் பஞ்சாயத்தை நகராட்சியுடன்
இணைத்துள்ளதன் மூலம் நகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை 39 லிருந்து 42 ஆக
அதிகரிக்கச் செய்த நகராட்சி நிர்வாகத்தை பாராட்டி நகர்ப்பகுதி முழுவதும்
அ.தி.மு.க., வினர் போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதார உள்ளிட்ட
மக்களின் அத்தியாவசிய தேவைகள் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள
நிலையில் வார்டு பிரச்னையை மையமாக வைத்து நகராட்சி நிர்வாகத்தைக்
கண்டித்தும், பாராட்டியும் பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த
கவுன்சிலர்கள் மாறி, மாறி போஸ்டர்கள் ஒட்டிவருவது நகர்ப்பகுதி மக்களை
எரிச்சலடையச் செய்துள்ளது.


