Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஸ்தம்பித்தன மில்கள்:தினமும் ரூ.16 கோடி உற்பத்தி இழப்பு

ஸ்தம்பித்தன மில்கள்:தினமும் ரூ.16 கோடி உற்பத்தி இழப்பு

ஸ்தம்பித்தன மில்கள்:தினமும் ரூ.16 கோடி உற்பத்தி இழப்பு

ஸ்தம்பித்தன மில்கள்:தினமும் ரூ.16 கோடி உற்பத்தி இழப்பு

UPDATED : ஜூலை 14, 2011 11:19 PMADDED : ஜூலை 14, 2011 11:03 PM


Google News
Latest Tamil News

கோவை:தென்னிந்திய சிறு நூற்பாலைகள் (சிஸ்பா) அறிவித்துள்ள 10 நாள் தொடர் வேலை நிறுத்தத்தால், ஸ்பின்னிங் மில்கள் நேற்று முதல் இயங்கவில்லை.

நாள் ஒன்றுக்கு 16 கோடி ரூபாய் வீதம், 160 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும்.பருத்தி விலை சரிவு, நூல் உற்பத்தி தேக்கம் போன்றவற்றால், நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தினமும் நஷ்டத்தை சந்தித்து வரும் சிறு நூற்பாலைகள், 10 நாட்களுக்கு இழுத்து மூடும் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.



உற்பத்தி இழப்பு, மில்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து, 'சிஸ்பா' தலைவர் தேவராஜ் கூறியதாவது:தென்னிந்திய அளவில், 600 சிறுநூற்பாலைகள் இயங்கி வருகின்றன. பருத்தி விளைச்சல், விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் நூல் மில்களை வெகுவாகவே பாதித்துள்ளன. கடந்த 2010-11ம் ஆண்டில் பருத்தி கையிருப்பு 40 லட்சம் பேல்கள். மத்திய அரசு நடப்பாண்டில் 360 லட்சம் பேல் உற்பத்தியாகும் என கணக்கெடுத்து, 55 லட்சம் பேல்களுக்கு அனுமதி அளித்தது. இதை செப்டம்பர் 2010க்குள் ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பருத்தி வரத்து இல்லாததால், பஞ்சு விலை அபரிமிதமாக கண்டி ஒன்றுக்கு 65 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது.



பஞ்சுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்ற தவறான புள்ளி விபரங்களால், மில்கள் அதிக அளவில் பருத்தியை வாங்கி இருப்பு வைத்தன. ஆனால், எதிர்பார்ப்புக்கும் மாறாக பருத்தி விலை சரிந்ததால், மில்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன. இந்திய பருத்திக் கழகமும் விலையை உயர்த்தி விற்பனை செய்தது பஞ்சு விலை ஏற்றத்துக்கு காரணம்.பருத்தி விலை உயர்ந்தபோது, நூலின் விலையும் உயர்ந்தது. பருத்தி நூல் பயன்படுத்துவோர் நடத்திய போராட்டத்தால், ஏற்றுமதி நூலுக்கு அரசு அளித்து வந்த, 'டூட்டி டிராபேக்' சலுகையும் ரத்து செய்யப்பட்டது. பருத்தி நூல் ஏற்றுமதிக்கும் அரசு தடை விதித்தது. இதனால், உள்நாட்டில் உள்ள மில்கள், வெளிநாட்டு வாடிக்கையாளர்களை இழந்தன. வெளிநாட்டில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி, உள்நாட்டில் அதிக அளவு நூல் தேக்கத்தை ஏற்படுத்தியது.பருத்தி விலை சரிவு, நூல் விலை சரிவு, நூல்களின் தேக்கம் என பல்வேறு நெருக்கடியை ஸ்பின்னிங் மில்கள் சந்தித்தன. இவை, நூல் மில்களில் உற்பத்தியை குறைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின.



அதேசமயம், தற்போது இழுத்து மூடும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளன.தேவைக்கும் மேல் நூல் உற்பத்தி அதிகமாக உள்ளதால், இந்த நிலையை சரி செய்ய பல நாட்கள் ஆகலாம். எனவே, நிலைமை சீரடையும் வரை 10 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம் செய்ய 'சிஸ்பா' முடிவு செய்துள்ளது.மில்கள் இந்த நெருக்கடியிலிருந்து மீள, 'டூட்டி டிராபேக்' எனப்படும், வரி சலுகையை மீண்டும் மில்களுக்கு வழங்க வேண்டும். திருப்பூரில் உள்ள சாயப்பட்டறை பிரச் னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். ஆயத்த ஆடை கள் மீது விதிக்கப்பட்டுள்ள 10.3 சதவீத கலால் வரியை உடனடியாக நீக்க வேண்டும்.



நூற்பாலைகளில் ஏற்பட்டுள்ள இழப்பை நீண்ட கால கடனாக மாற்றி, குறைந்த வட்டி விகிதத்தில் கொடுக்க ஆவன செய்ய வேண்டும். தற்போதுள்ள வங்கிகளின் வட்டி விகிதத்தை 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.இவ்வாறு, சிஸ்பா தலைவர் தேவராஜன் கூறினார்.தொடர்வேலை நிறுத்தத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சிறு நூற்பாலைகள் இயங்கவில்லை. இந்த மில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி யாற்றும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us