Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அரக்கோணம் மார்க்கத்தில் 12 பெட்டி கொண்ட ரயில் இயங்குவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு

அரக்கோணம் மார்க்கத்தில் 12 பெட்டி கொண்ட ரயில் இயங்குவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு

அரக்கோணம் மார்க்கத்தில் 12 பெட்டி கொண்ட ரயில் இயங்குவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு

அரக்கோணம் மார்க்கத்தில் 12 பெட்டி கொண்ட ரயில் இயங்குவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 14, 2011 11:04 PM


Google News

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும், புறநகர் மின்சார ரயில்களில், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

நெரிசலை தவிர்க்க, 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, தினசரி பல்லாயிரக்கணக்கானோர், சென்னைக்கு வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என, பலதரப்பட்ட மக்களும் மின்சார ரயில்களை நம்பியுள்ளனர்.



இந்த ரயில்களில், இரண்டு மகளிர் பெட்டிகள், இரண்டு 'வெண்டார்ஸ்' பெட்டிகள் மற்றும் ஐந்து பொது பெட்டிகள் என, மொத்தம் ஒன்பது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 'பீக் அவர்' எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில், இந்த ஒன்பது பெட்டிகளிலும், பயணிகள் நிற்க இடமின்றி படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளிலும் தொங்கியபடி பயணிக்கின்றனர். தற்போது, தாம்பரம் மார்க்கத்தில் செல்லும் பல மின்சார ரயில்களில், 12 பெட்டிகள் இயக்கப்படுகின்றன. இதனால், அதிக பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். இதே போல், அரக்கோணம் மார்க்கத்திலும், 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.



இது குறித்து, கடம்பத்தூர் ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த, ஸ்ரீதர் என்பவர் கூறியதாவது: திருத்தணி, அரக்கோணம் மார்க்கத்தில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கானோர், சென்னைக்கு செல்ல ரயில்களைத் தான் நம்பியுள்ளனர். தற்போது, ஒன்பது பெட்டிகள் இருப்பதால், பயணிகள் இடமில்லாமல், நெருக்கடியில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. பயணிகள் வசதிக்காக, 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை, இயக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை வைத்தனர்.



கடந்த, 2008ம் ஆண்டு சென்னை, கடற்கரை - திருத்தணி புறநகர் மின்சார ரயிலில், 12 பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டது. ஆனால், பல ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்பார்ம்கள், ஒன்பது பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிற்கும் அளவிற்கே உள்ளன. இதனால், அந்த ரயிலில் கூடுதலாக இருந்த, 3 பெட்டிகள் குறைக்கப்பட்டு, ஒன்பது பெட்டிகளும் இயங்குகிறது. எனவே, நீளம் குறைவாக உள்ள ரயில் நிலையங்களிலிருக்கும் பிளாட்பார்ம்களை, நீட்டித்து, 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களை இயக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.



இது குறித்து, தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் அனந்தராமன் கூறியதாவது: தற்போது, தாம்பரம் மார்க்கத்தில், ஒன்பது மற்றும் 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை விரைவில், 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரக்கோணம் மார்க்கத்தில் 12 பெட்டிகள் நிற்பதற்கு வசதியாக, நீளம் குறைவாக உள்ள, பிளாட்பார்ம்களை நீட்டிக்கும் பணி நடக்கிறது. அம்பத்தூர், பட்டரவாக்கம், இந்து கல்லூரி உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் இப்பணி நடக்கிறது. ஒரு பிளாட்பாரத்தை நீட்டிக்க, 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இப்பணி முடிந்ததும், 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அனந்தராமன் கூறினார்.



என்.சரவணன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us